கொரோனா வைரசை எதிர்த்து போராடுபவர்களுக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய துப்புரவு தொழிலாளி

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த உயிர்க்கொல்லி நோயால் இதுவரை 563 பேர் பலியாகி இருக்கிறார்கள். 28 ஆயிரம் பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், கொரோனா வைரஸ் மேற்கொண்டு பரவாமல் தடுக்கவும் சீன டாக்டர்கள் இரவு, பகல் பாராமல் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க சீன விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சாண்டோங் மாகாணத்தின் டோங்காங் நகரில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு முதியவர் ஒருவர் வந்தார். அவர் தான் கொண்டு வந்திருந்த ஒரு பொட்டலத்தையும், ஒரு கடிதத்தையும் போலீஸ் நிலையத்துக்குள் வைத்துவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.

போலீசார் அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது அதில் 12 ஆயிரம் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சத்து 22 ஆயிரம்) இருந்தது. பின்னர் போலீசார் முதியவர் விட்டு சென்ற கடிதத்தை படித்தனர்.

அதில் தான் ஒரு துப்புரவு தொழிலாளி என்றும், தனது சேமிப்பு பணமான 12 ஆயிரம் யுவானை கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கும்படியும் அவர் குறிப்பிட்டு இருந்தார். எனினும் அந்த முதியவர் தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை கடிதத்தில் தெரியப்படுத்தவில்லை.

இந்த சம்பவம் சீன மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply