யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட நகைகளை சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கவேண்டும் : மனோ கணேசன்

இலங்கை அரசு, இராணுவத்தினரால் யுத்தத்தின் இறுதிக்கட்டங்களில் கைப்பற்றப்பட்ட நகைகளை, மீண்டும் நகைகளின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறினார். இலங்கை இராணுவத்தினர், யுத்தத்தின் இறுதி மாதங்களில், வடக்கே பல்வேறு இடங்களில் சுமார் 49 கோடி இலங்கை ருபாய் மதிப்புள்ள தங்க நகைகளை சேகரித்திருப்பதாகவும், இந்த நகைகள் சட்ட ரீதியாக இலங்கை மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கை பாராளுமன்றத்தில் ஆளும்கட்சி பிரதம கொறடா, தினேஷ் குணவர்த்தன கூறியதாக செய்திகள் கூறின.

இது குறித்து பிபிசிக்கு பேட்டியளித்த மனோகணேசன், இந்த நகைகள் தமிழீழ வங்கி என்ற பெயரில் விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வங்கியிடம் , தமிழ் மக்கள், தங்கள் அவசரத்தேவைகளுக்காக ஈடாக வைத்தவைகளாக இருக்கவேண்டும் என்றார்.

இந்த நகைகள் விடுதலைப்புலிகளின் வங்கிகளிலிருந்து பெறப்பட்டவையாக இருந்தாலும், அவை தமிழ் மக்களின் உடமைகள், அவைகளின் சொந்தக்காரர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவைகளை உரியவர்களிடம் சேர்க்கவேண்டியது அரசின் கடமை என்றார் மனோ கணேசன்.

இந்த நகைகள் இவ்வாறு இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன என்று அவ்வப்போது சொல்லப்பட்டு வந்தாலும், இது குறித்து யுத்தம் முடிந்த ஒன்றரை ஆண்டு ஆன பிறகு இப்போதுதான் அரசாங்கம் வாய் திறந்திருக்கிறது என்றார் மனோ கணேசன்.

யுத்தத்தின் இறுதிக்கட்டங்களில் சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் வன்னிப்பகுதியிலிருந்து வெளியேறி, வவுனியா பகுதியில் தஞ்சம் புகுந்தார்கள். அவர்கள் பொதுவாக தங்களது உடமைகள் அனைத்தையும் விட்டுவிட்ட நிலையிலேயே ஓடிவர நேர்ந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply