வெளிநாடுகளின் தேவைகருதியே எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன : ஜனாதிபதி
வெளிநாடுகளின் தேவைகளுக்கு ஏற்பவே எதிர்க்கட்சியினர் இப்போது அரசியல் செய்கின்றனரேயொழிய நாட்டு மக்களுக்காக அல்ல என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று கேகாலையில் தெரிவித்தார். பொய்களைக் கூறி வதந்திகளைப் பரப்பி அதிலேயே உயிர்வாழ எதிர்க்கட்சியினர் முயற்சி செய்கின்றனர். பொய்களாலும், வதந்திகளாலும் நாட்டு மக்களை ஒரு போதும் ஏமாற்ற முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒழுங்கு செய்திருந்த கேகாலை மாவட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கேகாலை நகர சபையின் நகரமண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; இந்த நாடு சுதந்திரமடைந்தது முதல் 55 வருடங்கள் வரையும் இந்நாட்டினரின் தலா வருமானம் ஆயிரம் டொலர்களாகத்தான் இருந்தது. ஆனால், கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் இது 2400 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. நாட்டுமக்களின் வருமானம் அதிகரித்திருப் பதையே இது புலப்படுத்துகின்றது.
இருந்த போதிலும் இலங்கையரின் தலா வருமானத்தை நாலாயிரம் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதே எமது பிரதான இலக்காகும். நாம் தனிநபர், குடும்பம், கிராமம், நாடு என்ற அடிப்படையில் முழு தேசத்தையும் அபிவிருத்தி செய்வதற்கான பலவிதமான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இத்திட்டத்தின் கீழ்தான் பத்து இலட்சம் குடும்பங்களைப் பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரம் ரூபாபடி செலவிடப்படும். அக்குடும்பங்கள் சுய தொழில் துறையில் தன்னிறைவு அடைவதற்கு இத்திட்டம் மூலகாரணமாக விளங்கும்.
மத வழிபாட்டுத் தலங்களினதும், பாடசாலைகளினதும் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த வீட்டுப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்தும் முன்னெடுக்கக் கூடிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையே சாரும்.
உள்ளூராட்சி தேர்தல் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று எதிரணியினர் கூறுகின்றனர். இதில் எவ்விதமான உண்மையுமே இல்லை. அதனை ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் மூலம்தான் செய்ய முடியும். அந்தத் தேர்தல்களை நடாத்துவதற்கு நீண்ட காலம் உள்ளது. அத்தேர்தல்களை நடாத்துவதற்கு முன்னர் மற்றொரு உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் நடாத்தக் காலமுள்ளது. அதனால் நாட்டை அபிவிருத்தி செய்ய சகலரும் ஒன்றுபட்டுச் செயற்படுவோம்.
எதிர்க்கட்சியினர் பொய்களைக் கூறி, வதந்திகளைப் பரப்பி உயிர்வாழ முயற்சி செய்கின்றனர்.
எமது மக்களை ஏமாற்ற முடியாது. எதிர்க்கட்சிக்கு செயல் திறன் மிக்க தலைமை இல்லை. அவர்கள் ஆளுக்கு ஆள் தலைமையைப் பிடித்துக் கொள்ள அடிபடுகின்றார்கள்.
அவர்கள் நாட்டு மக்களின் தேவைக்காக அரசியல் செய்யவில்லை. மாறாக தாயகத்தை வெளிநாடுகளுக்கு காட்டிக்கொடுப்பதற்கு ஏற்ப தகவல்களை வழங்கக் கூடியவகையில் அரசியல் செய்கிறார்கள். அதனால் தான் இங்கு ஊடக சுதந்திரம் இல்லை. ஜனநாயகம் இல்லை, மனித உரிமை மீறப்படுகின்றது என்று கூறுகின்றார்கள். இவர்களது பொய்ப் பிரசாரத்தை நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
நாட்டில் அச்சம், பீதியற்ற அமைதியான சூழலை நாம் ஏற்படுத்தியுள்ளோம். மக்கள் சுதந்திரமாக வாழவும், நடமாடவும் கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம். இந்நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக வீதிகள் கொங்கிஅட் இட்டு செப்பனிப்படுகின்றன. பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பல முன்னெடுக்கப்படுகின்றன. மாகாண வீதிகளை அபிவிருத்தி செய்ய நிதியொதுக்கீடு செய்துள்ளோம். முழு நாட்டையும் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம் என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, ஜகத் பாலசூரிய, சிரேஷ்ட அமைச்சர்கள் அதாவுட செனவிரட்ன, பேராசிரியர் திஸ்ஸ விதாரண பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க , சப்ரகமுவ ஆளுநர் டபிள்யு. ஜே. எம். லொக்குபண்டார, முதலமைச்சர் மஹீபால ஹேரத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply