மக்களிடையே பேதங்களை உருவாக்க சிலர் முயற்சி; சதியில் சிக்க வேண்டாம் : ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தலில் எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள், என்னை புகழுபவர்கள், விமர்சிப்பவர்கள் உட்பட சகலருக்கும் நானே ஜனாதிபதியாக இருக்கின்றேன். அதனால் சகலருக்கும் நான் சேவை செய்து வருகின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று மன்னாரில் தெரிவித்தார்.

இருந்த போதிலும் சிலர் எமது மக்களை பிரித்து வைத்து அவர்களைத் தொடர்ந்தும் ஏழை மக்களாக வைத்திருக்கவே விரும்புகின்றனர் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார். ஆனால், இந்நாட்டில் வாழுகின்ற பத்து இலட்சம் குடும்பங்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் வேலைத் திட்டத்தை எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பிக்கவுள்ளோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட மாநாடு மன்னார் பொது விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இம் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இப்பகுதியில் எனக்கு கொஞ்சம் பேர்தான் வாக்களித்தார்கள். பொதுத் தேர்தலிலும் எமது கட்சிக்கு குறிப்பிட்ட அளவினர் தான் வாக்கு அளித்தனர். ஆனால் எனக்கு வாக்கு அளித்தவர்கள், அளிக்காதவர்கள், என்னைப் புகழுபவர்கள், விமர்சிப்பவர்கள் உள்ளிட்ட சகலருக்கும் நானே ஜனாதிபதியாவேன்.

அதனால் சகலருக்கும் சேவை செய்து வருகின்றேன். அது எனது பொறுப்பு. ஜனாதிபதி தேர்தலும், பொதுத் தேர்தலும் நடாத்தப்படுவதற்கு நீண்ட காலம் உள்ளது. அத்தேர்தல்களுக்கு முன்னர் மற்றொரு உள்ளூராட்சி தேர்தலை நடத்தவும் வேண்டும். நிலைமை அப்படி இருக்கையில் எதிரணியினர் இந்த உள்ளூராட்சி தேர்தல் மூலம் ஆட்சி மாற்றத்தைச் செய்யப் போவதாகக் கூறுகின்றனர். இது வேடிக்கையானது.

அதன் காரணத்தினால் எம்மூடாக உங்கள் பிரதேசங்களைத் துரிதமாக அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். உங்களது கிராமத்தின் தேவைகளையும், குறைகளையும் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். முழு நாட்டிலும் வெற்றிலைச் சின்னமே அமோக வெற்றி பெறும். ஐ. ம. சு. முன்னணி எல்லா உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சி அமைக்கும். ஆகவே அரசின் ஊடாகவே உங்களது பிரதேசங்களின் தேவைகளும், குறைபாடுகளும் நிவர்த்திக்கப்படும்.

பத்து இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத் திட்டம் 12ம் திகதி ஆரம்பிக்கப்படும். கிராமம், நகரம் என்றில்லாமல் குடும்பம், குடும்பமாக நாட்டு மக்களை அபிவிருத்தி செய்வதே எமது பிரதான இலக்கு. எமது வேலைத்திட்டங்கள் மூலம் விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட சகல உற்பத்தியாள ர்களுக்கும் நல்ல விலை கிடைக்கும்.

கடந்த காலங்களில் கொழும்பும் அதனை அண்டிய பிரதேசங்களும் தான் அபிவிருத்தி செய்யப்பட்டன. அந்த நிலைமையை நாம் மாற்றி அமைத்துள்ளோம். இப்போது முழு நாட்டிலும் அபிவிருத்தி நடக்கின்றது. வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு உட்பட முழு நாடும் சமமாக அபிவிருத்தி அடைய வேண்டும் என்பது எமது பிரதான கொள்கையாகும்.

இந்த நாட்டில் வாழ்பவர் சகலரும் இலங்கையரே. எவரையும் இன, மத, மொழி ரீதியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. எந்த மதமும் இன, மத, மொழி ரீதியான பிரிவினைகளுக்குத் துணை போவது கிடையாது. அந்தவகையில் இந்நாட்டில் வாழும் சகலரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று வாழ வேண்டும். இதனூடாக சகலரும் முன்னேறிச் செல்ல முடியும்.

இருந்த போதிலும் சிலர் எமது மக்களை பிரித்து வைத்திருக்கவே விரும்புகின்றனர். ஆனால் அவர்களின் பிள்ளைகள் பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழுகின்றார்கள். அங்கு தான் அவர்களுக்கு வீடுகள் உள்ளன. அவர்களுக்கு வடக்கு, கிழக்கு எங்கு இருக்கின்றது என்பது தெரியாது.

இவர்கள் கட்டுநாயக்காவுக்கு விமானத்தில் வந்து உல்லாச ஹோட்டல்களில் தங்கிவிட்டு திரும்பிச் சென்றுவிடுகின்றனர். இவர்கள் தான் எமது மக்களையும் நாட்டையும் பிரித்து வைக்க விரும்புகின் றனர். பயங்கரவாதம் காரணமாக முப்பது வருட காலம் பின்தங்கியுள்ள வடக்கு, கிழக்கை சகல துறைகளிலும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அதனால் ஏனைய மாகாணங்களை விடவும் இப்பகுதிக்கு அதிகளவு நிதியொதுக்கீட்டை மேற்கொண்டு அபிவிருத்திகளை மேற்கொள்ளுகின்றோம். இருப்பினும் ஏனைய பிரதேசங்களில் வாழ்பவர்கள் வடக்குக்கு ஒதுக்குவது போல் எமது பகுதிக்கும் ஒதுக்க முடியாதா எனக்கேட்கும் நிலைமை கூட ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் சகல துறைகளையும் அபிவிருத்தி செய்து வருகின்றோம். பொருளாதார ரீதியாக நாட்டை அபிவிருத்தி செய்யும் போதே நாம் வளமானவர்களாக வாழ முடியும். மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களின் குழந்தைகள் மீன்பிடித் தொழிலில் தான் ஈடுபட வேண்டும். விவசாயிகளின் பிள்ளைகள் அத்தொழிலில் தான் ஈடுபட வேண்டும் என்றில்லை. உங்களது பிள்ளைகள் நன்கு கற்று உலகின் முன் நிலைக்கு வர வ§ண்டும். அதுவே எமது விருப்பம். அதனால் தான் எமது அபிவிருத்தி நடவடிக்கைகள் இன, மத பேதமின்றி முன்னெடுக்கப்படுகின்றன.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இப்போது தான் இரு வருடங்களாகியுள்ளன. எமக்கு இன்னும் பிரச்சினைகள் உள்ளன. மீனவர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. அதனைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடுகளுக்கு வந்துள்ளோம். உங்களுக்குக் காணி, இருப்பிட பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கடந்த 30 வருட காலம் நீங்கள் அனுபவித்த துன்பங்களை நானறிவேன். அதனால் தான் உங்களது தேவைகளையும் குறைபாடுகளையும் நிவர்த்திக்க அதிக கவனம் செலுத்துகின்றோம்.

எமக்குள் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற இன ரீதியான பேதம் வேண்டாம். எல்லோரையும் ஒரே விதமாகப் பார்ப்போம். உங்களைச் சிலர் தவறாக வழி நடத்த முயற்சி செய்யலாம். அவர்களது சதி வலையில் சிக்கி விடாதீர்கள். மீண்டும் பயங்கரவாதம் வேண்டாம். சகலரும் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், முன்னாள் எம்.பி. எஸ். கனகரட்ணம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply