றமணன் மயில்வாகனத்தை கனடாவிற்கு அனுப்புவதற்கு அமெரிக்கா நடவடிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவியகுற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கனேடியத் தமிழரான றமணன் மயில்வாகனம் என்பவரை கால மாற்றத்தை கருத்திற் கொண்டு கனடாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்க சமஸ்டி நிர்வாக நீதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பானது அமெரிக்க மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான பேச்சாளர் றொபேற் நர்டோசா தெரிவித்துள்ளார்.
2009 இலிருந்து றமணன் மயில்வாகனம் என்கின்ற இக்கனேடியத் தமிழர் அமெரிக்காவின் புறூக்கிளின் N.லு நீதிமன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
35 வயதான றமணன் மயில்வாகனம் 2006ல் ஒன்றாரியோவில் வைத்து கைதுசெய்யப்பட்டார். அமெரிக்காவில் இருந்த காலத்தில் பயங்கரவாத நிறுவனத்துக்கு கருவி ஒன்றை வழங்க முற்பட்டதாக குற்றம்சட்டப்பட்ட றமணன் மயில்வாகனம் பின்னர் மேலதிக விசாரணைக்காக புறூக்கிளினுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பயங்கரவாத அமைப்புக்கு உதவி செய்ய முற்பட்டதானது மிக மோசமான குற்றச் செயல் என்பதைக் காரணங்காட்டி மயில்வாகனத்துக்கு 15 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் உறுதியாக அறிவித்திருந்தனர்.
விடுதலைப் புலிகளுக்கு கருவிவழங்க முற்பட்டதன் பேரில் றமணன் மயில்வாகனத்துடன் சுரேஸ் சிறிகந்தராசா என்கின்ற தமிழர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், இலங்கையில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதால், கால மாற்றத்தைக் கருத்திற் கொண்டு றமணன் மயில்வாகனத்தை விடுவிக்க வேண்டும் என இவரது சட்டவாளர் வாதிட்டிருந்தார்.
‘என்னை விடுதலை செய்து விட்டால் நான் எனக்கும் எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பாக இருப்பேன் என நான் இங்கு உறுதிபடத் தெரிவிக்கிறேன்’ என றமணன் மயில்வாகனம் கேட்டுக்கொண்டிருந்தார்.
தனது சிறுவயதில் தகப்பனாரை இழந்த மயில்வாகனம் தனது பன்னிரெண்டாவது வயதில் சிறிலங்காவை விட்டு வெளியேறி கனடாவில் குடியேறினார். அதன் பின்னர் இவரது குடும்பத்தவர்களும் கனடாவில் குடியேறிக் கொண்டனர்.
‘இவர் தனது குடும்பத்தவர்களை கனடாவுக்கு கொண்டு வருவதில் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளார். இவர் தனது வாழ்வில் பல்வேறு துன்பங்களையும், தடைகளையும் சந்தித்துள்ளார்’ என மயில்வாகனம் சார்பாக வாதாடிய சட்டவாளர் தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply