தமிழக முதல்வரின் ஆதரவுடன் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் போட்டியில்
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி இன மக்களின் சார்பாக தான் போட்டியிடவுள்ளதாக பி ஏ சாங்மா உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டிலுள்ள பழங்குடி இனமக்கள் இம்முறை தமது இனத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டு மக்களுக்கு விடுத்ததாகவும் அவர் கூறுகிறார்.
கடந்த 60 ஆண்டுகளாக குடியரசுத் தலைவர் பதவி மற்ற இனங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்ட நிலையில், பழங்குடியினருக்கு அந்த வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை என்று சாங்மா சுட்டிக்காட்டினார்.
பழங்குடி இனத் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுகவும் பிஜு ஜனதா தளமும் தங்களது ஆதரவை தனக்கு அளிப்பதாக அறிவித்துள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
அக்கட்சிகளின் ஆதரவை ஏற்றுக் கொண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகவும் சாங்மா உறுதிப்படுத்தினார்.
எனினும் இதுவரை அவர் சார்ந்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எந்த முடிவையும் அறிவிக்கவில்லை எனவும் அவர் கூறுகிறார்.
மேலும் பழங்குடி இனத்தவர் ஒருவர் குடியரசுத் தலைவராக வேண்டும் என்பது, ஒரு அரசியல் கட்சி அல்லது அந்த அரசியல் கட்சியின் கருத்தாக உருவாகவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பலகட்சியின் தலைவர்களை தாங்கள் சந்தித்து வருவதாகவும், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி மற்றும் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் கூறும் அவர் இது குறித்து முக்கிய எதிர்கட்சியான பி ஜே பி உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய தலைவர்களை சந்தித்துள்ளதாகவும் கூறினார்.
பழங்குடி இன மக்களின் கோரிக்கை நியாயமானது என்பதை பி ஜே பி ஏற்றுக் கொண்டது எனவும் சாங்மா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply