வடக்கு மக்களை வாட்டும் வரட்சி!
இலங்கையின் வடக்கே ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக சிறுபோக நெற்செய்கை பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
பல இடங்களில் குடிநீருக்காக மக்கள் நீண்ட தூரம் அலைய நேரிட்டிருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தின் கீழ் மூவாயிரம் ஏக்கர் நெற்செய்கை இதுவரையில் நீரின்றி கருகியிருப்பதாக விவசாயிகள் தெரிவித்திருக்கின்றனர். இதனை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
சிறுபோக நெற்செய்கைக்கு இம்முறை சீரான நீர்விநியோகம் செய்யப்படவில்லை என்றும் இதுவே இந்தப் பாதிப்புக்குக் காரணம் என்றும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் இரணைமடு குளத்தில் இருந்த நீரின் அளவுக்கு ஏற்ப நெற்செய்கைக்கான பரப்பளவை அதிகாரிகள் தீர்மானிக்காததும் பயிரழிவுக்கு முக்கிய காரணம் என அந்த விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்ட கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர் பொறியியலாளர் நவரட்ணம் சுதாகரன், இரணைமடு குளத்தில் 29 அடி நீர் இருந்தபோது அதற்கேற்ற வகையில் 8000 ஏக்கர் பரப்பளவில் சிறுபோகம் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது என தெரிவித்தார்.
´´சிறுபோக நெற்செய்கைக்கென தீர்மானிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைய உரிய நேரத்தில் விதைத்தவர்களுடைய பயிர்களுக்கு அழிவு ஏற்படவில்லை. உரிய திகதிக்குப் பின்னர் ஒரு மாதம் தாமதித்து விதைத்தவர்களின் பயிரே போதிய நீரின்றி அழிவுக்கு உள்ளாகியது´´ என்றும் அவர் கூறினார்.
அத்துடன் கடந்த வருடம் கோடையில் போதிய அளவு மழை பெய்ததைப் போன்று இம்முறை மழை பெய்யாததும் பயிர்கள் கருகுவதற்கு முக்கிய காரணம் என்றும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடும் வறட்சி காரணமாக வவுனியாவிலும் நெற்செய்கை பாதிக்கப்பட்டிருப்பதுடன், ஒரு போதும் இல்லாத வகையில் வவுனியா நகரை அண்டியுள்ள குளத்தில் நீர் முழுமையாக வற்றி குளம் வறண்டிருப்பதனால் குளத்து மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதாக ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply