தாதியரின் பாதுகாப்பு கேள்விக்குறி! யாழில் இன்று ஆர்ப்பாட்டம்
யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று நடத்தியுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் தென்னிலங்கையைச் சேர்ந்த தாதியர்களின் ஆனைப்பந்தியில் அமைந்துள்ள விடுதிக்குள் இனந்தெரியாத நபர்கள் நுழைந்து தாக்கியதில் இவர்களுள் ஒருவர் கையில் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
26 வயதுடைய மினுவாங்கொட பகுதியினைச் சேர்ந்த பெண் தாதியொருவரே கையில் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தமக்கு பாதுகாப்பான இடத்தில் விடுதியை ஏற்படுத்தித் தருமாறும் குற்றச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியே இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் சுலோக அட்டைகளை தாங்கியிருந்தனர். இச்சுலோக அட்டைகளில் விடுதி வசதியின்றி தாதியர்கள் பரிதவிப்பு, உள்ளக விடுதி வசதி தாதியருக்கு எப்போது? தாதியரின் பாதுகாப்பு கேள்விக்குறி, வைத்திய சாலை விடுதிக்குள் தாதியர் விடுதியை ஏற்படுத்தித் தா! போன்ற சுலோகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
இதேவேளை சம்பவ இடத்திற்கு சென்ற வைத்தியசாலை பணிப்பாளர் தாதியர்களுக்கான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததுடன் தாக்குதலுக்குள்ளான தாதி உட்பட தென்னிலங்கையினை சேர்ந்த 18 தாதியர்களும் வைத்திய சாலை வளவில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் யாழ் போதனா வைத்திய சாலையில் உள்ள அனைத்து தாதியர்களும் தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர். காலை 10மணி முதல் சுமார் இரு மணி நேரம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. போராட்டத்தினால் நோயாளர்களுக்கான மருத்துவ உதவிகள் குறித்த நேரம் தடைப்பட்டிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply