ஜெனீவாவில் பதிலடி! அரசு அறிவிப்பு

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஒரு காலப்பகுதிக்கான சர்வதேச மீளாய்வு நடைபெறும் போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புகள் கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் யதார்த்த பூர்வமான பதில்களை கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தயாராக இருப்பார்கள் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்தார்.

ஐ. நா. மனித உரிமை பேரவைக்கு இரகசியமான முறையில் அரசாங்கத்திற்கு எதிரான ஆதாரங்களுடனான சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டு இதனை பலதரப்பட்ட தமிழ் அரச சார்பற்ற அமைப்புகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் பரிந்துரை செய்திருப்பதாகவும் அது உண்மையா என்று கேட்கப்பட்ட தற்கு பதிலளித்த கருணாதிலக்க அமுனுகம, இவ்விதம் பரிந்துரை செய்தவற்றில் சில அரச சார்பற்ற அமைப்புகள் இலங்கைக்கு எதிரான கொள்கையை கடைப்பிடிப்பதாக தெரிவித்தார்.

இவை வேண்டுமென்றே அரசாங்கத்தின் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகவும் அவர் கூறினார். தற்போது உத்தியோகபூர்வ ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஆவணமான இலங்கை பற்றிய குறிப்பிட்ட கால ஆய்வறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறதென்றும் இங்கு கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கப்பட்டுள்ளதென்றும் கூறினார்.

இலங்கை மீள் குடியேற்ற நடவடிக்கை களையும், புனர்வாழ்வு செயற்பாடுகளையும் நிறைவேற்றி உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணத்தை அளித்திருப்பதாக வும் யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் செய்து முடித்த சாதனைகளில் இதுவும் ஒன்று என அவர் கூறினார்.

நவம்பர் மாதத்தில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இப்படியான கேள்விகளுக்கு இலங்கை ஆதாரபூர்வமான பதில்களை அளிக்கும் என்றும் அமுனுகம கூறினார். இலங்கை அரசாங்கத்தின் தேசிய நடவடிக்கை திட்டம் மனித உரிமைகளுக்கு ஊக்கமளித்து, அதனை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமென்றும் கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் இப்போது நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

எல்.ரி.ரி.ஈ. இயக்கம் புதைத்த நிலக்கண்ணி வெடிகளை முற்றாக நீக்கிய பின்னர் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 3 லட்சம் பேரை நாம் குடியமர்த்தி இருக்கிறோம் என்றும் அமுனுகம தெரிவித்தார்.

சிறுவர்களை ஆயுதம் தாங்கிய போராளிகளாக சேர்த்துக் கொள்ளும் அநீதிக்கு அரசாங்கம் இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. யுத்தம் முடிவடைந்த பின்னர் நீதி விசாரணைக்கு அப்பாற்பட்ட முறையில் தன்னிச்சையாக மனித கொலைகளை புரிந்தவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் குற்றமிழைத்திருந்தால் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

ஜெனீவாவில் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை கூட்டத்தொடருக்கு ஜனாதிபதியின் விசேட தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான தூதுக்குழு பங்கு கொள்ளும். இந்த தூதுக் குழுவில் சட்டமா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு, மீள் குடியேற்ற அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply