திருமணத்திற்கு சென்ற மணமகளை திருப்பி அனுப்பிய இந்தியா

விசா காலம் முடிந்து, இலங்கைக்கு அனுப்பப்பட்ட இளம்பெண், தன் திருமணத்திற்காக நேற்று முன்தினம், மீண்டும் சென்னை வந்தார். அனுமதிக்க மறுத்த அதிகாரிகள், அவரை இலங்கைக்கே திருப்பி அனுப்பினர்.  இலங்கை, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் தர்மரத்தினம், 26, மோகனபிரியா, 25; சகோதரிகள். இவர்கள், சுற்றுலா விசாவில், 2010ல், சென்னைக்கு வந்தனர். விசா காலம் முடிந்தும், சென்னையில் தங்கியிருந்த அவர்களை, குடியுரிமை அதிகாரிகள், கடந்த சில மாதங்களுக்கு முன், இலங்கைக்கு திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 5:20 மணிக்கு, ஏர் – இந்தியா விமானம் மூலம், தர்மரத்தினமும், மோகனபிரியாவும், கொழும்பில் இருந்து, சென்னைக்கு வந்தனர். குடியுரிமை சோதனையில், இவர்கள், ஏற்கனவே, சென்னையில், “ஓவர் ஸ்டேவாக இருந்து அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்பது தெரிந்தது.

குடியுரிமை சட்டப்படி, விசா காலம் முடிந்து தங்கியிருப்பவர்கள், திருப்பி அனுப்பப்பட்டால், ஒரு ஆண்டு வரை, அவர்களை மீண்டும் நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது. இதை காரணம் காட்டி, தர்மரத்தினத்தையும், மோகனபிரியாவையும், வந்த விமானத்திலேயே இலங்கைக்கு திரும்பி செல்லுமாறு, அதிகாரிகள் கூறினர்.

அதிர்ச்சியடைந்த தர்மரத்தினம், “என் தங்கை மோகனபிரியாவிற்கு, சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக தான் நாங்கள் வந்திருக்கிறோம். நீங்கள் திருப்பி அனுப்பினால், திருமணம் நின்றுவிடும்,´´ என்றார்.

“சட்டம் அனுமதிக்காத பட்சத்தில், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது´´ என, குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். இதற்கிடையே, மோகனபிரியாவை திருமணம் செய்ய இருந்த, இலங்கையைச் சேர்ந்த அந்தோணி, விமான நிலையம் வந்து, குடியுரிமை அதிகாரிகளிடம் பேசினார்.

அவரிடம், “நீங்கள் இலங்கைக்கு சென்று திருமணம் செய்து கொள்ளுங்கள்´´ என, அதிகாரிகள் கூறினர். அந்தோணி, “நான் லண்டன் பாஸ்போர்ட் பெற்றிருப்பால், இலங்கை செல்ல முடியாது´´ என்றார். ´அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது´ என, அதிகாரிகள் கூறினர். இதைத் தொடர்ந்து, தர்மரத்தினமும், மோகனபிரியாவும், இலங்கைக்கு திரும்பினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply