48 மணிநேர தடுப்புக்காவலை எதிர்த்து முன்னணி சோசலிஷ கட்சி மனு
பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒருவரை தடுத்து வைக்கும் கால எல்லையை 48 மணிநேரம் நீடிப்பதை எதிர்த்து முன்னணி சோசலிஷ கட்சி, உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. ஜனநாயக தேசியக் கூட்டணியின் எம்.பி.யும் சோசலிஷ முன்னணிக் கட்சியின் உறுப்பினருமான அஜித் குமார, இந்த மனுவை தாக்கல் செய்தார்.
இந்த சட்டமூலத்தின் மூலமாக பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுவதாகவும் இது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனால், அந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றவியல் தண்டனைக்கோவை சட்டத்தின் பிரகாரம் சந்தேகநபரொருவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தாமல் 24 மணிநேரம் பொலிஸாரினால் தடுத்து வைத்திருக்க முடியும்.
எனினும் குற்றவியல் முறைகள் (சிறப்பு ஏற்பாடுகள்) எனும் சட்டமூலத்தின் மூலம் சந்தேகநபரை 48 மணிநேரம் தடுத்து வைத்திருக்க அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
இது அதிகார துஷ்பிரயோகத்துக்கு வலிவகுக்கும் என்பதுடன், சந்தேகநபரின் உரிமையை மீறுவதாக அமையும் என்றும் அம்மனவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம், 24ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (படங்கள் – நிஷல் பதுகே)
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply