சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமில்லை : அரசாங்கம்

இலங்கையின் உள்நாட்டு செயற்பாடுகளை சர்வதேசத்தினர் விசாரணை நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது இது எமது கொள்கை ரீதியான தீர்மானமாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் வெளியார் இலங்கை வருவதை அனுமதிக்க முடியாது. இது எமது நாட்டின் இறைமையை மீறும் செயலாகும். இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் எவ்வாறான நிலைமை வந்தாலும் நாங்கள் அதனை எதிர் கொள்வோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத் துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்து சென்றார். மாநாட்டை நடத்துவதற்காக இலங்கை மேற்கொண்டுவருகின்ற ஏற்பாடுகள் குறித்து அவர் திருப்தி வெளியிட்டார்.

எனவே பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறுமென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நவநீதம்பிள்ளைக்கு எதனையும் தெரிவிக்கும் உரிமையுள்ளது. அவர் எதனையும் தெரிவித்துவிட்டுப் போகட்டும். ஆனால் எந்தவொரு நிலைமையையும் சர்வதேசத்தில் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். நாங்கள் எந்தவொரு நிலைமைக்கும் முகம் கொடுக்க தயாராகிவிட்டோம். குறிப்பிட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் வெளியார் இலங்கை வருவதை அனுமதிக்க முடியாது. குறிப்பாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கமானது இவ்வாறு ஒரு விடயத்தை குறிப்பிட்டு அது தொடர்பில் ஆராய்வதற்கு வருவதாக அறியப்பட்டது.

அவ்வாறு ஒரு விடயத்தை ஆராய்வதற்கு இலங்கை வருவதற்கு அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply