புகைப்படங்கள் உண்மையானவை அல்ல: அடியோடு மறுக்கிறார் இராணுவப் பேச்சாளர்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவ பாதுகாப்பில் இருந்தபோது கொலை செய்யப்பட்டதாக செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் உண்மையானவை அல்ல என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு எதிரான சக்திகளின் திட்டமிட்ட செயற்பாடுகளின் ஓர் அங்கமே இதுவாகும்.அண்மைக்காலத்தில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை திகழ்கிறது. இந்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இலங்கையை பிளவுபடுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகிறார்கள்.

குறிப்பாக போலியான தகவல்களையும், வதந்திகளையும் திட்டமிட்ட வகையில் பரப்பி வருகிறார்கள். இலங்கை இராணுவத்துக்கு எதிராக இவ்வாறு போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது இது முதன்முறையல்ல.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவ்வித உண்மையான ஆதாரங்களும் இல்லை. நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஒழுங்குமுறையான நடைமுறைகள் உள்ளன.

அவ்வாறான சில குற்றச்செயல்களை குற்றவியல் விசாரணைத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. நம்பகமான ஆதாரங்களுடன் ஒத்துழைப்பு வழங்கினால் இதற்கு தீர்வு காணலாம்.

எனினும் போலியாக வெளியிடப்படும் இவ்வாறான புகைப்படங்கள் இணையத்தின் வாயிலாக இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் இராணுவ பாதுகாப்பில் இருப்பதாகவும் பின்னர் மரணமடைந்துள்ள நிலையில் இருப்பதாகவும் செனல்4 நிறுவனம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இவை சர்வதேச ஊடகங்கள் பலவற்றில் வெளியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply