மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, திருமாவளவன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது
தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) சார்பில் இன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டது. தூதரகத்தை முற்றுகையிட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, திருமாவளவன் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.போர் குற்றங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும், அவருக்கு தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை சரியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) சார்பில் சென்னையில் இன்று இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கிய இப்போராட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 9 மணிக்கு கருப்பு உடை அணிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், வள்ளுவர் கோட்டம் அருகே குவிந்தனர். காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த சிறிய மேடையில் மு.க.ஸ்டாலின், திமுக மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம், தா.மோ.அன்பரசன் ஆகியோர் இருந்தனர்.
முதல் கட்டமாக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தூதரகத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி பொலிசார் கைது செய்தனர். அதன்பின், மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, திருமாவளவன் ஆகியோர் முன்னிலையில் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் தூதரகத்தை முற்றுகையிட சென்னர். அப்போது, ஜனாதிபதி ராஜபக்ஷவை கண்டித்து கோஷம் போட்டனர். ஜனாதிபதி ராஜபக்ஷவின் உருவ பொம்மையை கொளுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்டாலின், வீரமணி, திருமாவளவன் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள இலங்கை வங்கி, எழும்பூரில் உள்ள புத்தவிஹார் ஆகிய இடங்களிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply