கிளிநொச்சியில் சர்வதேச சமாதான பல்கலைக்கழகம் ஸ்தாபிக்க ஜனாதிபதி ஏற்பாடு

சர்வதேச சமாதான பல்கலைக்கழகமொன்று வட மாகாணத்தில் ஸ்தாபிக்கப்படும். இதற்கான சகல ஏற்பாடுகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற் கொண்டு வருவதாக ஜனாதிபதி செயலக சமூக அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் கலாநிதி நந்தன விஜேசிங்ஹ தெரிவித்தார். தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நிறைவுபெற்றதையடுத்து ஊடகவி யலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பொன்று கடந்த ஞாயிறு (31) அன்று சாய்ந்தமருது சிப்யஸ் ஹோட்டலில் இடம்பெற்றபோது இதுபற்றி தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், உத்தேச சர்வதேச சமாதான பல்கலைக்கழகம் கிளிநொச்சியில் உள்ள பளை எனுமிடத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான நிதி உதவியை இலங்கையில் சமாதானத்தில் அக்கறையுள்ள உலக நாடுகளும், புலம்பெயர் நன்கொடை யாளர்களும் வழங்கவுள்ளனர்.

இப்பல்கலைக்கழகத்தில் ஆறு பீடங்களும், பட்டப்பின்படிப்பு வசதிகளும், க. பொ. த. (சா/த), க. பொ. த (உ/த) பயின்றவர்களுக்கான சான்றிதழ் கற்கைநெறிகளும் நடாத்தப்படும். விசேடமாக தெற்காசிய நாடுகளின் மாணவர்களும், சார்க் நாடுகளின் மாணவர்களும் இப்பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

பயங்கரவாதத்தை முறியடித்து உலகிற்கு முன்மாதிரியாக இருந்துவரும் நமது நாட்டில் சர்வதேச சமாதான பல்கலைக்கழகம் அமைய வேண்மெனவும், இதன் மூலம் சமாதானத்திற்கான தலைமைத்துவத்தினை இலங்கைக்கு வழங்க முடியும்.

முப்பது வருட யுத்தம் காரணமாக இனங்களுக்கிடையே ஏற்பட்டிருந்த முரண்பாடுகளை களைந்து எல்லோரும் இலங்கையர் என்ற எண்ணக் கருவையும், இளைஞர்களின் அபிலாசைகளை புரிந்துகொள்ளும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் ஜனாதிபதி சமூக அபிவிருத்தித் திட்டம் முக்கிய பங்களித்து வருகிறது.

இச்சமூக அபிவிருத்தித் திட்டத்தில் இணைந்துகொள்வதில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கிராமப்புற இளைஞர்கள், முன்னாள் போராளிகள் என பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் இணைந்து செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply