யுத்த குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு ஆதாரத்தினையும் கொண்டு போக முடியாது : ராவணா பலய

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு ஆதாரத்தினையும் யாரும் கொண்டு போக முடியாது. எம் மீது விசாரணைகளை மேற்கொள்ள முன்னர் பிரித்தானியா மீது சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது ராவணா பலய பௌத்த அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.பிரித்தானியா மீது விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற மகஜரை பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்திடம் கையளித்துள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு எதிராகவும் பிரித்தானியாவிற்கு எதிரான மனித உரிமை மீறல் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் நேற்று ராவணா பலய பௌத்த அமைப்பினால் கொழும்பு பிரித்தானிய உயர் ஸ்தானிகரத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் படங்களை பதித்த பதாதைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ராவணா பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தாநந்த சந்தாதிஸ்ஸ தேரர் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச சக்திகள் பழி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இலங்கை அரசாங்கத்தை குறை கூறி பிரித்தானியாவும் அதனோடு இணைந்த நாடுகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக செயற்படுகின்றன.

குறிப்பாக பொதுநலவாய உச்சி மாநாட்டிற்காக இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரித்தானிய பிரதமர் இலங்கை வரமுன்னர் இந்தியாவிற்கு சென்று புலம்பெயர் விடுதலைப் புலிகளை சந்தித்து வந்திருந்தார். அதேபோல் இங்கு வந்ததும் ஜனாதிபதியை சந்திக்க முன்னர் விக்னேஸ்வரனையே சந்தித்திருந்தார்.

கமரூன் புலம்பெயர் விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளுக்காகவும் கூட்டமைப்பினரின் கருத்துக்கும் ஏற்றாற்போல் செயற்படுகின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. மேலும் இன்று இலங்கையில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் ஆதாரமற்ற விடயங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு சர்வதேச நாடுகள் அழுத்தங்களை கொடுக்கி்ன்றனர். ஆனால் பிரித்தானியக் காலனித்துவத்தில் இலங்கையர் மீது பிரித்தானியர் காட்டு மிராண்டித்தனமான சித்திரவதைகளை மேற்கொண்டனர். எமது சொத்துக்களையும் செல்வங்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். இதற்கு எதிராக ஏன் எந்தவொரு மனித உரிமைகள் அமைப்புக்களும் குரல் கொடுக்கவில்லை.

சிங்களவர்கள் அன்று கொல்லப்பட்டமைக்கு இதுவரை எவ்விதமான நிவாரணங்களும் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டமை மனித உரிமை மீறல் என்றால் எமக்கு நடைபெற்ற அநியாயங்களை என்னவென்று சொல்வது. நாட்டிற்கு எதிராகவும் மக்களைக் கொல்வதற்காகவும் ஆயுதம் தூக்கிப் போராடிய தீவிரவாதிகளுக்காக சர்வதேசங்கள் குரல் கொடுக்கின்றன. ஆனால் எமது அப்பாவி சிங்கள மக்களும் இராணுவத்தினரும் கொல்லப்பட்டமைக்கு யாரும் குரல்  கொடுக்கவில்லை.

இலங்கை தொடர்பில் எந்தவொரு நாடும் தலையிடுவதற்கு நாம் அனுமதிக்கப் போவதில்லை. எமது பிரச்சினைகளை நாமே பார்த்துக் கொள்வோம்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் இங்கிருந்து எந்தவொரு ஆதாரத்தையும் சர்வதேச தீவிரவாதிகள் கொண்டு செல்வதை நாம் அனுமதிக்கப்போவதில்லை. இலங்கை தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் நாட்டிற்கு எதிராக இடம்பெறுமாயின் அது எம் அனைவரின் உயிர்த்தியாகத்தின் பின்னரேயாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply