அழுத்தங்களுக்கு பயந்து அபிவிருத்திகளை நிறுத்த மாட்டோம் : ஜனாதிபதி

என்னதான் அழுத்தங்கள் வந்தாலும் இந்நாட்டுக்கு நாம் ஆற்றவேண்டிய எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையையும் நிறுத்த மாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடுவெலவில் தெரிவித்தார். பயங்கரவாதத்தை முழுமையாக அழித்து வெற்றி கண்டது போன்று அபிவிருத்தியிலும் நாம் வெற்றி அடைவோம். அதற்கு உங்களது பலம் எமக்கு அவசியம் என்றும் ஜனாதிபதி அவர்கள் கூறினார். கொழும்பு சுற்றுவட்டப் பாதையின் முதலாம் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொட்டாவ- கடுவெல அதிவேக நெடுஞ்சாலையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்த பின்னர் கடுவெல, கொத்தலாவல மகா வித்தியாலய விளையாட்ட ரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.27 பில்லியன் ரூபா செலவில் இச்சுற்றுவட்டப் பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப்பாதையின் அங்குரார்ப்பணத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று கடுவெல- கொட்டாவ சுற்றுவட்டப் பாதை திறந்து வைக்கப்படுகின்றது. அதனோடு சேர்த்து அதிவேக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி நிறுவனம் இன்று முதல் இப்பாதை ஊடாக பஸ் சேவையையும் ஆரம்பிக்கின்றது. இவ்வாறு வீதியொன்றை மக்களிடம் கையளிக்கும் போது கடந்த 8 வருட காலப் பகுதியில் எவ்வளவு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நாம் மக்களிடம் கையளித்து இருக்கின்றோம் என்பது குறித்து எம் நினைவுக்கு வருகின்றது. இவ்வாறு பாரியளவிலான பல அபிவிருத்தித் திட்டங்கள் இக்காலப்பகுதியில் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இன்று ஒரு நகரில் மாத்திரமல்லாமல் முழு நாட்டிலும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இன்று இப்பாடசாலையில் மஹிந்தோதய ஆய்வு கூடமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முழு நாட்டிலும் 1000 ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆய்வு கூடமும் 60 கணனிகளுடன் கணிதம், மொழி உள்ளிட்ட ஆய்வு கூடங்களையும் உள்ளடக்கி இருக்கின்றது.

இன்று கொழும்பு காலி வீதி, ஹொரண கொழும்பு வீதி என்பன விரிவுபடுத்தப்படுகின்றன. கொழும்பில் புதிய நகரம் நிர்மாணிக்கப்படுகின்றது ஹோட்டல்கள் அமைக்கப்படுகின்றன. தென்னாசியாவிலேயே மிக உயரமான கடைத் தொகுதி நிர்மாணிக்கப்படுகின்றது. இவ்வாறு பல்வேறு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் நாடெங்கிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாத்தறைக்கான அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இவை அனைத்தையும் நாம் வரலாற்றுச் சம்பவங்களாகவே நினைவில் கொள்கின்றோம்.

அண்மையில் பொதுநலவாய மாநாடு இங்கு நடைபெற்றது. அம்மாநாட்டில் பங்குபற்ற இங்கு வருகை தந்த உலக நாடுகளின் தலைவர்கள், 30 வருடங்கள் யுத்தம் இடம்பெற்ற நாடா இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வாறு அபிவிருத்தி அடைகின்றது என ஆச்சரியமடைந்தார்கள். எம்மை விமர்சிப்பவர்களும், ஐக்கிய நாடுகள் சபைக்குப் புகார் செய்பவர்களும் இங்கு இடம்பெறுகின்ற உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தியை ஏற்றுக் கொள்கின்றார்கள்.

நாம் முன்னெடுக்கின்ற அபிவிருத்தித் திட்டங்களைப் பாராட்டுகின்ற அவர்கள் மக்களின் இதயங்களை ஒன்று திரட்டக் கூடிய வேலைத் திட்டத்தை தயாரிக்குமாறு எமக்குக் கூறுகின்றார்கள். அதனை நாம் செய்கின்றோம் நாபம் அரசியல்வாதிகள். நாம் மக்களின் இதயங்களுடன் ஒன்றிணைய வேண்டியவர்கள். இதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடு எம்மிடம் கிடையாது. எமக்கு இவர்கள் அனைவலரையும் ஒன்றிணைக்க வேண்டும். அதற்கு ஏற்பவே எமது கடமைகளையும் பொறுப்புகளையும் நாம் நிறைவேற்றுகின்றோம்.

பயங்கரவாதத்துடன் இணைந்திருந்தவர்களை நாம் புனரமைத்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம். துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்த பிள்ளைகளை காப்பாற்றி அவர்களது பெற்றோரிடம் கையளித்துள்ளோம். ஆறு வயது முதலான பிள்ளைகளுக்கு துப்பாக்கியும், கத்தியும் கொடுக்கப்பட்டிருந்த யுகம் அன்று இருந்தது. நாம் அவர்களை விடுவித்துள்ளோம்.

நாம் முன்னெடுக்கின்ற அனைத்து அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் நீண்ட காலத்தை கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றது. அவை எல்லா மக்களையும் ஒன்றிணைக்கும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள். மாறாக வடக்கு, தெற்கு என மக்களைப் பிரிக்கும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் அல்ல.

கிராமம், நகரம், மலைநாடு, கீழ்நாடு என்ற வேறுபாடு எம்மிடமில்லை. இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்தும் எல்லோருக்கும் சமமான அளவிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் ஒருயுகத்தில் எல்லாமே நகரத்திலேயே மையங் கொண்டிருந்தது. கிராமத்திற்கு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் கொண்டு செல்லப்படவில்லை. இன்று 98% மின் வசதியைப் பெற்றுள்ளார்கள்.

மேலும் கட்டுநாயக்க- கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டு அதிக காலம் செல்லவில்லை. அனால் இந்த குறுகிய காலத்திற்குள் இப்பாதையில் 21 இலட்சம் பேர் பயணித்துள்ளார்கள். 600 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. அதே போன்று தென்பகுதிக்கான அதிவேக நெடுஞ்சாலையில் இற்றை வரை 90 இலட்சம் வாகனங்கள் பயணித்துள்ளன. இதன்மூலம் நாட்டு மக்களே நன்மை அடைந்து வருகின்றார்கள். இந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் இடைநடுவில் நிறுத்தப்படுவதற்கு மக்கள் தயாரில்லை.

நாம் அபிவிருத்தியின் பாரிய விருட்சமாவோம். விசாலமான மரத்தைப் போன்றவர்கள். மரமானது அதனை தரிக்க வருபவருக்கும் நிழல் வழங்குகின்றது. அதேபோன்று தான் எம் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுமாகும். எம் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விமர்சிப்பவர்களும், அவற்றுக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்களும் கூட அத்திட்டங்களால் பயனடைகின்றார்கள்.

இன்று மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. தொலைபேசி கணனி பாவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு எல்லா வசதி வாய்ப்புகளும் மேம்பாடு அடைந்துள்ளன.

கடந்த காலத்தில் நாம் பாதாள உலகத்தினரை ஒழித்துக் கட்டினோம். ஆனால் அன்று இதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 1977 ஆம் ஆண்டின் பின்பே இந்நாட்டுக்கு போதைப்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது அதற்கு முன்னர் அவை இங்கிருக்கவில்லை.

இதற்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்கும் போதே கூச்சலிடுகின்றார்கள். கை நீட்டுகின்றார்கள் எமக்கு எம் பிள்ளைகளை நற்பண்புகள் நிறைந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அவர்கள் எமது எதிர்காலப் பரம்பரையினர், அவர்களுக்கும் இந்நாடு சொந்தமானது. அவர்களுக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

உலகில் உணவு நெருக்கடி, எரிபொருள் நெருக்கடி ஏற்பட்ட போதும் கூட பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்ததோடு அந்நெருக்கடிகளைக் கடந்து நாட்டைச் சரியான பாதையில் இட்டுச் சென்றோம். பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டும் வரையும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாம் நிறுத்தவில்லை. அதே போன்று அபிவிருத்தி நடவடிக்கைகளையும் நிறுத்த மாட்டோம். நாம் அபிவிருத்தியில் வெற்றி அடைவோம். அதனால் அபிவிருத்தி நடவடிக்கை எதனையும் இடைநடுவில் கைவிடாது தொடர்ந்து முன்னெடுப்பதற்கு உங்களது ஒத்துழைப்பு அவசியம்.

இன்று மனித உரிமை தொடர்பாக ஆணைக்குழு முன்பாக கோள் சொல்பவர்கள், மனு கொடுப்பவர்கள், அங்கு செல்லத் தயாராக இருப்பவர்கள், ஏற்கனவே அங்கு சென்றிருப்பவர்கள் போன்றோர் என்னதான் கூறினாலும், செல்வாக்குமிக்க நாடுகளிலிருந்து என்னதான் அழுத்தம் வந்தாலும் இந்த நாட்டுக்காக நாம் ஆற்ற வேண்டிய எதுவொன்றையும் நாம் செய்யாது இருக்க மாட்டோம். அதேபோன்று நிறுத்தவும் மாட்டோம். இதனை உறுதியாக நினைவுபடுத்துகின்றேன் என்று குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தில் அமைச்சர்கள் சுசில் பிரேமஜயந்த், விமல் வீரவன்ச, நிர்மல கொத்தலாவல, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, தகவல், ஊடக அமைச்சின் மேற்பார்வை எம். பி. ஏ. எச். எம். அஸ்வர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply