இலங்கையில் இன்றும் நாளையும் தபால் மூல வாக்களிப்பு

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் இடம்பெறுகிறது. இம்முறை தபால் மூலம் வாக்களிக்க ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 784 அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்களிப்பையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தபால் மூல வாக்களிப்பு குறித்து நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, டிலான் பெரேரா ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர். அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா கூறியதாவது,

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலே அரச துறை பலப்படுத்தப்பட்டது. பட்டதாரிகள் ஒரு இலட்சம் பேருக்கு அரச துறையில் நியமனம் வழங்கப்பட்டது. இதில் 70 வீதமானவர்கள் பெண்களாகும். கிராம உத்தியோகஸ்தர், வங்கி உத்தியோகஸ்தர் நியமனத்திலும் பெண்களுக்கே அதிகம் நியமனம் கிடைத்துள்ளது.

ஐ. தே. க ஆட்சியில் அரச உத்தியோகஸ்தர் தொகையை 1/3 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓய்வூதியத்தை நிறுத்த சட்டம் தயாரிக்கப்பட்டது. ஜனாதிபதி தான் அதனை ரத்துச் செய்தார். ஓய்வூதியத்தை நிறுத்த முயன்றவர்கள் இன்று நாம் ஓய்வூதியத்தை நிறுத்தப்போவதாக எம்மை விமர்சிக்கின்றனர்.

எமது அரசாங்கம் ஒருபோதும் அரச ஊழியர்களின் சலுகைகளையோ உரிமைகளையோ குறைக்காது. அரச உத்தியோகஸ்தர்கள் குறித்து ஐ.தே.க முதலைக் கண்ணீர் வடிக்கிறது என்றார்.

எமது ஆட்சியில் ஒவ்வொரு வரவு செலவுத் திட்டத்திலும் அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. பெண்களின் பிரசவ லீவு அதிகரிக்கப்பட்டது. அரச உத்தியோகஸ்தர்கள் 24 மணி நேரமும் காப்புறுதி செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் ஆட்சியில் நடந்த சகல தேர்தலிலும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் ஐ. ம. சு. மு. வுக்கே வாக்களித்துள்ளனர். ரணிலின் ஆட்சியிலும் கூட எமக்கே அரச ஊழியர்களின் வாக்குகள் கிடைத்தன என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply