தேமுதிகவில் 5 வேட்பாளர் பெயர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், தேமுதிக முதல் கட்டமாக, 5 தொகுதிகளுக்கான தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தேமுதிக வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள பதினாறாவது மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து, பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளது என இந்த மாதம் 6ஆம் தேதி அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வார காலம் கடந்தும் தொகுதி உடன்பாட்டில் எந்தவிதமான இறுதி முடிவும் எட்டப்படாத நிலையில், இந்த அறிவிப்பை இக்கட்சி வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். தனது பிரசாரத்தின்போது கூட்டணியில் நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்து பேசிய அவர் ஊடகங்கள் யூகங்களின் அடிப்படையில் மட்டும் செய்திகளை வெளியிடுவதாக குற்றஞ்சாட்டினார்.

அதைபோல் பணம் பெற்றுக் கொண்டு தங்களது கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகக் கூறி அதை அவர் வன்மையாக கண்டித்தார்.

வெளியிடப்பட்டுள்ள தேமுதிகவின் முதல் பட்டியலில், நாமக்கல் தொகுதியில் மகேஷ்வரன், மதுரை தொகுதியில் சிவமுத்துக்குமார், திருவள்ளூர் தனி தொகுதியில் யுவராஜ், திருச்சி தொகுதியில் ஏ.எம்.ஜி.விஜயகுமார் மற்றும் வடசென்னை தொகுதியில் சவுந்திரபாண்டியன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளும், தேமுதிக கோரும் அதே தொகுதிகளை கோருவதால் மட்டுமே இழுபறி தற்போதும் நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பம் முதலே கூட்டணியில் குழப்பங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வரும் பாரதிய ஜனதா கட்சி, கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கு நடுவே சமரசம் செய்வதில் காலம் கடத்தி வருவதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன.

14ம் தேதியான இன்று இறுதி முடிவு எட்டப்படும் என தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி கூறி வந்துள்ள நிலையில், அது இன்றும் அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply