மலேசிய விமானம் இந்திய பகுதியில் பறக்கவில்லை: ராணுவ அதிகாரி

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட விமானம் கடந்த 7–ந்தேதி மாயமாகிவிட்டது. அதில் இருந்த 239 பயணிகள் கதி என்ன என்று தெரிய வில்லை. மாயமான விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என கருதி 14 நாடுகளை சேர்ந்த 58 விமானங்கள், 43 கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் மாயமாகி 9 நாட்களாகியும் விமானம் பற்றிய தகவல் தெரியவில்லை. தென் சீன கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடைக்க வில்லை. எனவே, அது இந்திய பெருங்கடலில் அந்தமான் நிகோபர் பகுதியில் விழுந்திருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்தது.எனவே, தேடும் பணியில் இந்தியா உதவியை மலேசியா நாடியது. அதை தொடர்ந்து இந்திய கடற்படை 6 போர்க்கப்பல்கள் மற்றும் 4 விமானங்கள் மூலம் அந்தமான் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அங்கு சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவில் இந்திய கடற்படை, விமானப்படை மற்றும் கடல் ரோந்து படையினர் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

விமானங்கள் வானில் பறந்து உடைந்த விமானத்தின் பாகங்கள் மிதக்கிறதா என கண்காணித்து வருகின்றனர். இருந்தும் விமானத்தின், எந்த வித துரும்பும் கிடைக்க வில்லை.

இந்த நிலையில், இந்திய பகுதியில் மாயமான மலேசியாவின் எம்.எச். 370 ரக விமானம் பறக்க வில்லை. அதற்கான அறிகுறி எதுவும் இல்லை என ராணுவ அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, மும்பை ஆகிய 5 விமான நிலையங்களில் ரேடார் கருவிகளை இந்திய விமானப்படை அமைத்துள்ளது. அவற்றில், மலேசிய விமானம் இந்திய பகுதியில் பறந்ததற்கான எந்த பதிவும் இடம் பெற வில்லை என கூறியுள்ளனர்.

இந்திய விமான படையின் முன்னாள் தலைவர் ஏர் மார்ஷல் பி.கே. பார்பொரா கூறும் போது, இந்தியா மற்றும் பாகிஸ்தானும், ரேடார் கருவிகளை அமைத்துள்ளன. இப்பகுதியில் விமானம் பறந்து இருந்தால் கட்டாயம் அதில் பதிவாகி இருக்கும்.

ஒருவேளை விமானம் கடத்தப்பட்டிருந்ததால் அது ரேடாரில் பதிவாகாமல் இருக்க தாழ்வாக பறக்க விடப்பட்டிருக்கும் அப்படி இருந்தாலும் நீண்ட தூரம் விமானம் தாழ்வாக பறக்க முடியாது. எனவே விமானம் இந்த பகுதியில் பறந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.

மாயமான விமானத்தில் பயணம் செய்தவர்களில் 156 பேர் சீனர்கள். ஆனால் விமானம் பற்றிய தகவல்களை மலேசியா சரிவர தெரிவிக்க மறுப்பதாக பயணிகளின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், மலேசிய அரசு மீது வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply