வைகோ வீட்டில் அல்வா சாப்பிட்ட விஜயகாந்த்
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் விருதுநகரில் போட்டியிடும் மதிமுக தலைவர் வைகோவுக்கு ஆதரவாக வாக்கு கேட்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று விஜயகாந்த் கூறினார். விருதுநகர் மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் வைகோவை ஆதரித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிவகாசியில் புதன்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்டார். சிவகாசி-விருதுநகர் புறவழிச் சாலையில், வேனில் நின்றபடி பேசிய அவர் மேலும் கூறியதாவது:
கருணாநிதி ஏழையாக வந்தார். தற்போது பெரும் பணக்காரர் ஆகிவிட்டார். பணக்காரர்களுக்கு மட்டுமே ஏதாவது செய்வார். இந்தத் தொகுதியில் போட்டியிடும் வைகோ, தமது சொந்தச் செலவில் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பு ஊசி போட்டுள்ளார். உடல் ஊனமுற்றவர்களுக்கு முகாம் நடத்தி, தேவைப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து பலரை நடக்க வைத்தவர். வைகோவுக்கு வாக்குக் கேட்பது என்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர் எனக்கு மூத்தவர். மக்களாகிய நீங்கள் கூட்டங்களில் கை தட்டினால் மட்டும் போதாது. வாக்களிக்க வேண்டும். “வி என்றால் விஜயகாந்த், வி என்றால் வைகோ, வி என்றால் விருதுநகர், வி என்றால் வெற்றி’. எனவே, இந்தத் தொகுதியில் வைகோ கண்டிப்பாக வெற்றி பெறுவார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். சிவகாசி என்றால் பட்டாசு. சீன நாட்டிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்கு பட்டாசு வருகிறது. இதனை தடை செய்ய வேண்டும். இதற்கு வைகோ வெற்றிபெற்று நரேந்திர மோடி பிரதமராக வேண்டும்.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக முதலில் பதவியேற்றபோது, அங்கு குடிநீர் தட்டுப்பாடு இருந்தது. நர்மதா நதியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து ஒரு நபருக்கு 20 லிட்டர் தண்ணீர் தினமும் கொடுத்தார். அதுபோல, அத்தியாவசியமான சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தக் கூடியவர் மோடி.
இது மக்கள் கூட்டணி. வெற்றிக் கூட்டணி. வைகோ உங்களுக்கு நல்லது செய்வார். அவருக்கு அளிக்கும் வாக்கு மோடிக்கு அளிக்கும் வாக்காகும் என்றார். வைகோ உடனிருந்தார்.
வைகோ வீட்டில் அல்வா சாப்பிட்ட விஜயகாந்த்
திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ வீட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் புதன்கிழமை மாலை ஒரு மணிநேரம் செலவழித்தார். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திருநெல்வேலியிலிருந்து புதன்கிழமை புறப்பட்ட விஜயகாந்த், செல்லும் வழியில் கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ வீட்டுக்குச் சென்றார்.
அவரை வாசல் வரை வந்து மாலை அணிவித்து வைகோவும், அவரது தம்பி வை. ரவிச்சந்திரனும் வரவேற்றனர். பின்னர், வீட்டுக்குள் அழைத்துச் சென்று உறவினர்களை அறிமுகம் செய்து வைத்தார் வைகோ.
அப்போது, வைகோவின் தாயார் மாரியம்மாளுக்கு மாலை, சால்வை அணிவித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் விஜயகாந்த். தொடர்ந்து, வைகோவின் மனைவி ரேணுகாதேவி, மகன் துரை வையாபுரி மற்றும் சகோதர, சகோதரிகளின் குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார் வைகோ.
பின்னர், விஜயகாந்த்துக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. தோசை, 2 வகை சட்னியும், அல்வாவும் வழங்கப்பட்டது. பின்னர், காபி வழங்கப்பட்டது. மாலை 4.10 மணிக்கு வந்து 5.05 மணி வரையிலும் ஒரு மணிநேரமாக வைகோவின் உறவினர்களுடன் பேசினார் விஜயகாந்த்.
இதில், 15 நிமிடம் மட்டும் வைகோவுடன் தனி அறையில் தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை
நடத்தினார். வைகோ வீட்டுக்கு விஜயகாந்த் வருகை தந்திருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply