சிரியா உள்நாட்டுப் போரில் பலியானோர் எண்ணிக்கை 1 1/2 லட்சமாக உயர்ந்தது

சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. போராட்டக்காரர்களில் சிலர் அண்டை நாடுகளில் இருந்து போராயுதங்களை வாங்கி ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அதை அதிபர் ஆசாத் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து ராணுவத்தை ஏவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறார்.

ராணுவம் நடத்தி வரும் வான் வழி, ஏவுகணை மற்றும் குண்டு வீச்சு தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். உயிர் பிழைத்த பலர் உடல் உறுப்புகள் சிதைந்து ஊனமுற்றவர்களாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

பல லட்சம் மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான துருக்கி, லெபனானில் தஞ்சம் அடைந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சபை கடும் முயற்சி மேற்கொண்டது.

இதன் விளைவாக, போராளி குழுக்களுடன் சிரியா அரசு ஜெனிவாவில் நடத்திய 2 சுற்று சமாதானப் பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றமும் இன்றி தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில், சிரியாவில் உள்நாட்டுப் போர் நிலவரங்களை கண்காணித்து வரும் மனித உரிமை அமைப்பு இந்தப் போரில் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்து 344 பேர் பலியாகியுள்ளதாக அறிவித்துள்ளது. இவர்களில் 35 ஆயிரம் ராணுவ வீரர்கள் உள்பட 58 ஆயிரத்து 480 பேர் அரசு தரப்பிலும், 37 ஆயிரத்து 781 பேர் போராளிகள் தரப்பிலும் பலியாகியுள்ளனர்.

7 ஆயிரத்து 985 அப்பாவி குழந்தைகள் உள்பட பொதுமக்கள் தரப்பில் 51 ஆயிரத்து 212 பேரும், அடையாளம் தெரியாதவர்களாக 2 ஆயிரத்து 871 பேரும் பலியாகியுள்ளதாக அந்த அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில், கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகரங்களில் பீப்பாய் குண்டுகளை வீசி அரசுப் படையினர் நடத்திய ஹெலிகாப்டர் தாக்குதலில் 50 பேர் பலியானதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply