ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவும்போது சில சர்வதேச நாடுகள் அபிவிருத்திக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சி: ஜனாதிபதி
சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் நாட்டையும் மக்களையும் முன்னேற்றி வருவதைப் பொறுக்காத நாடுகளே எமது முன்னேற்றத்தை பின்நோக்கித் தள்ள முயற்சிக்கின்றன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். 
எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் வெற்றிகொண்ட சுதந்திரத்தை பின் தள்ள இடமளிக்கப் போவதில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜப்பான் போன்ற நாடுகள் எமது முன்னேற்றத்துக்குப் பங்களிப்புச் செய்து வருகையில் வேறு சில சர்வதேச நாடுகள் எமது வெற்றிகரமான முன்னேற்றத்தை பின்தள்ளும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றன எனவும் தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்டத்தில் ரம்பேவ மகாவித்தியாலய மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான நவீன உபகரணங்கள் வழங்கும் வைபவமும் மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூட திறப்புவிழாவும் ஜனாதிபதியின் தலைமையில் நெற்று நடைபெற்றன.
அமைச்சர்கள் திஸ்ஸ கரலியத்த, எஸ். எம். சந்ரசேன உட்பட அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அநுராதபுர மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட 50 பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்களும் 11 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோக பெளசர்களும் வழங்கப்பட்டன. இந்த பெளசர்களை ஜப்பான் ஜய்க்கா நிறுவனம் அன்பளிப்புச் செய்திருந்தது.
ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-
நாம் நகரங்களைப் போன்றே கிராமங்களையும் கட்டியெழுப்பியுள்ளோம். பிள்ளைகள் கல்வி கற்பதற்கான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
இன்று மாணவர்களின் கல்வி மேம்பாட்டை நோக்குகையில் க. பொ. த. சாதாரண தரமாகட்டும் அல்லது உயர்தரமாகட்டும் நகர்ப்புற பாடசாலை மாணவர்களை விட கிராமப்புற பாடசாலை மாணவர்களே சிறந்த சித்தி பெறுகின்றனர்./
யாழ்ப்பாணம், கிளிநொச்சி எமது பிரதேசமான வீரகெட்டிய பாடசாலை மாணவர்களே சிறந்த சித்திபெற்றுள்ளனர். தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் எமது மாணவர்கள் பிரசித்திபெற்று வருகின்றனர்.
அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச புத்தாக்க கண்காட்சியில் இலங்கையில் மிஹிந்தலையைச் சேர்ந்த மாணவனின் புத்தாக்கம் முதலிடம் பெற்றது. இதனூடாக அந்த மாணவன் உலக பிரசித்தி பெற்றுள்ளான்.
நாம் தற்போது உலகை வெல்லக்கூடிய பிள்ளைகளை உருவாக்கி வருகிறோம். இத்தகைய பிள்ளைகளை உருவாக்க எமக்கு வாய்ப்புக் கிடைத்தது நாட்டில் சிறந்த சூழலை ஏற்படுத்தியதால் தான். பயம், சந்தேகமின்றி சுதந்திரமான சூழலை நாம் நாட்டின் சகல பகுதிகளிலும் ஏற்படுத்தியதால்தான்.
இந்த நாட்டு மக்களுக்கும் பிள்ளைகளுக்கும் நாம் சுதந்திரத்தையும் அமைதியையும் பெற்றுக் கொடுத்துள்ளோம். பயம் சந்தேகமின்றி கல்வி கற்கும் சூழலை நாடெங்கிலும் ஏற்படுத்தியுள்ளோம்.
எங்கும் எவரும் சுதந்திரமாக பயணிக்கவும் அனைத்து மதத்தினரும் சுதந்திரமாக தமது சமயங்களை வழிபடவும் நாம் உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். அந்த சுதந்திரத்தை நாம் பெற்றுக் கொடுத்துள்ளதால்தான் எமது பிள்ளைகள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் வெற்றிபெற்று வருகின்றார்கள்.
இதன் மற்றுமொரு நடவடிக்கையையே நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம். எமது பிள்ளைகள் முன்னேறுகையில் நாடும் வளம் பெறும். ஏனெனில் ஆரோக்கியமான பிள்ளைகளே நாட்டின் சொத்துக்கள். அவர்கள் சுதந்திரமாக வாழும் எதிர்காலத்தையே நாம் உருவாக்கி வருகின்றோம். வட மத்திய மாகாணம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. குடிநீர் பிரச்சினையால் சிறு நீரக நோய் ஏற்படுகிறது. இதுபற்றி நாம் ஆராய்ந்துள்ளதுடன் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.
1977 ல் ஆரம்பித்த திறந்த பொருளாதாரத்துடன் மக்கள் தமது பாரம்பரிய விவசாயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை. இதனால் எமது சந்ததியினரின் ஆரோக்கியம் திடகாத்திரம் குன்றியது. இதுவும் சிறுநீரக நோய் போன்ற நோய்களுக்குக் காரணமாகியது.
காடுகளை அழித்தே பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் குளங்கள் நிறைந்து காணப்பட்ட ‘ரஜரட்ட’ வீரமக்கள் சிறுநீரக நோய்க்கு ஆளாக வேண்டி ஏற்பட்டது. இந்நிலையை மாற்றியமைக்கவே நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள் ளோம். இதற்கு எமக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் நாம் இது தொடர்பில் பின்வாங்கப் போவதில்லை. இன்று இங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்ல இடமளிக்க முடியாது. அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள சகல கிணறுகளையும் பரிசோதனை செய்யுமாறு நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். அத்துடன் சகல குளங்களையும் சுத்திகரித்து புனரமைக்கவும் இங்குள்ள அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன்.
இத்தகைய செயற்பாடுகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. நான் தேசிய அறுவடை விழாவில் இன்று கலந்து கொண்டு இரசாயனமற்ற நெல் வகைகளையே ஸ்ரீமகா போதிக்குப் படைத்தேன். இதனையே நாம் விவசாயிகளுக்கும் வலியுறுத்துகின்றோம். பல்வேறு நெல் வர்க்கங்கள் முற்காலத்தில் இங்கு பயிடப்பட்டுள்ளன. அவை உடலுக்கு ஆரோக்கியமானவை.
எமது பாரம்பரிய உற்பத்தி, உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அதற்கான அசெளகரியங்களையும் சவால்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த நாட்டு மக்கள் சுயாதீனமாக முன்னேறுவதைப் பொறுக்காதவர்களே அதற்குத் தடைபோட முனைகின்றனர். ஜப்பான் போன்ற எமக்கு உதவுகின்ற நாடுகளும் உள்ளன. எனினும் எமது வெற்றிகளை பின்தள்ள முயற்சிக்கும் வேறு சர்வதேச நாடுகளும் உள்ளன.
நடந்து முடிந்த தேர்தலை நோக்குகையில் தோல்வியடைந்த எதிர்க் கட்சி தாம் வெற்றிபெற்றதாகக் கூறுகின்றது. வெற்றிபெற்றவர்கள் எந்த ஆரவாரமுமின்றி செயற்படுகின்றனர். எதிர்க் கட்சியினர் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது விருப்பமும். எப்போதும் வெற்றிபெற்றவர்கள் தோல்வியுற்றோரை மிதிப்பது தவறு. தோல்வியுற்றாலும் வெற்றியடைந்ததாக நினைப்பது மகத்தானது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நேற்றைய இந்த நிகழ்வில் ஜப்பானிய தூதுவர் நொபுறிடொ ஒபோ உட்பட ஜப்பானிய தூதரக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply