தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை எதிர்த்து வழக்கு: ஜெயலலிதா 

தேர்தல் பிரசார கூட்டத்தில் வேட்பாளரே பங்கேற்க முடியாமலும், அவரது பெயரை உச்சரித்து பிரசாரம் செய்ய முடியாமலும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஜனநாயகக் கேலிக் கூத்தாகும். தேர்தல் ஆணையத்தின் இத்தகைய உத்தரவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும்’ என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார். நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்தை ஆதரித்து, நாமக்கல் கருப்பட்டிபாளையம் பிரிவு பகுதியில் வியாழக்கிழமை தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திட தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியாகச் சென்று வேட்பாளர்களின் பெயரைக் குறிப்பிட்டு, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறேன். இதன்மூலம், மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு ஆதரவு அதிகரித்து, எனது பிரசார கூட்டத்துக்கு பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர், குறிப்பாக, திமுகவினர் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயம் காரணமாக, எனது கூட்டத்துக்கு ஆள்கள் அழைத்து வரப்படுவதாகக் கூறுகின்றனர். அந்தக் கட்சிகள் விரக்தியால், மிரட்சியால் இப்படிக் கூறுவது இயல்பானதே. ஆனால், தேர்தல் ஆணையமும் இதேபோன்று செயல்படுவது வியப்பாக உள்ளது.

அரசியல் தலைவர் பேசும் பொதுக்கூட்ட மேடையில் வேட்பாளர் இருந்தாலும் அல்லது அவரது புகைப்படம் இருந்தாலும், அவரது பெயரை உச்சரித்து பிரசாரம் செய்தாலும் கூட்டத்துக்கான மொத்தச் செலவுகளும் அந்த வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேரும் என்ற தேர்தல் ஆணையத்தின் விதிமுறை நியாயமற்றது. தவிர, பொதுக்கூட்டத்தைக் காண வரும் பொதுமக்களின் போக்குவரத்துச் செலவினமும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படுவது எப்படி நியாயமாகும்?.

தேர்தல் பொதுக்கூட்டங்கள் என்றால், அரசியல் தலைவர்களின் பதாகைகள், கட்அவுட்கள் வைப்பது இயல்பாகும். 1952ஆம் ஆண்டு அண்ணா, எம்ஜிஆர் காலம் முதலும், 32 ஆண்டுகள் நான் தேர்தல் பிரசாரம் செய்த காலத்திலும் இதே நடைமுறைதான் இருந்துள்ளது. ஆனால், இந்தத் தேர்தலில்தான் திடீரென தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகள் என்ற பெயரில், தொகுதி அதிமுக வேட்பாளரே பிரசார கூட்டத்துக்கு வர முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையம் விதிக்கும் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளால் மக்களின் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துள்ளது. இது ஜனநாயக உரிமைகளுக்கு முற்றிலும் புறம்பானதாகும். தவிர, தேர்தல் பொதுக்கூட்டத்தில் வேட்பாளரே மேடையேற முடியாததும், வேட்பாளரின் பெயரைச் சொல்லி வாக்குகள் கோர முடியாததும் ஜனநாயகக் கேலிக்கூத்தாகும். தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

மேடையில் வேட்பாளர்கள் இல்லாமலே பிரசாரம்

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி காரணமாக, மேடையில் வேட்பாளர்கள் இல்லாமலேயே தமிழக முதல்வர் ஜெயலலிதா நாமக்கல், சேலத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரம், சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை பிரசாரம் செய்தார். இதற்கிடையே, அரசியல் கட்சித் தலைவர்கள் பேசும் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் இருந்தாலும் அல்லது அவரது பெயரை உச்சரித்து பிரசாரம் செய்யப்பட்டாலும் பொதுக்கூட்டத்துக்கான மொத்தச் செலவும் வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவு காரணமாக, ஜெயலலிதா பிரசார பொதுக்கூட்ட மேடைகளில் நாமக்கல், சேலம் மக்களவைத் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்கவில்லை. பிரசாரத்தின் போதும் வேட்பாளர்கள் பி.ஆர்.சுந்தரம், வி.பன்னீர்செல்வம் ஆகியோரின் பெயரை உச்சரிக்காமல், அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அடுத்து, பிரசார மேடையில் வேட்பாளர்களே இடம்பெறாதது பொதுமக்கள், வாக்காளரிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

காங்கிரஸின் துரோகங்களுக்கு திமுக உறுதுணை

மத்தியில் காங்கிரஸ் அரசு கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் துரோகம் இழைத்து வந்துள்ளது. இந்தத் துரோகத்துக்கு திமுக உறுதுணையாக இருந்ததுடன், தமிழர் நலனில் அக்கறை செலுத்தாமலும் இருந்துள்ளது. இந்த இரு கட்சிகளின் செயல்பாடுகளால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழகத்துக்கு என்னென்ன நன்மைகள் செய்வோம் எனக் கூறி திமுகவினர் வாக்குகள் கோரவில்லை. மாறாக, திமுக தலைவர் கருணாநிதி சுட்டிக்காட்டுபவரே நாட்டின் பிரதமராக வர வேண்டும் என்றே பிரசாரம் செய்கின்றனர்.

கருணாநிதி சுட்டிக்காட்டிய காங்கிரஸ், மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் என்ன நன்மை செய்தது? நாடு சீரழியவும், தமிழக உரிமைகள் பறிபோகவும் காங்கிரஸ் அரசுதான் காரணம். தற்போது மீண்டும் கருணாநிதி சுட்டிக்காட்டுபவர் பிரதமராவது எதற்கு?

சுய நலத்துக்காக இந்தியாவின் வளங்களைச் சுரண்டிய திமுகவை இந்தத் தேர்தலில் வேரோடு வீழ்த்த வேண்டும் என்றார் ஜெயலலிதா.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply