காணாமல் போன விமானத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்: ஆஸ்திரேலிய

வானில் நடுவழியில் காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றும், அதனை கண்டுபிடிக்க முடியும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது என்றும் ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது. அந்த விமானத்தை தேடும் பணி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள ராணுவ தளத்துக்கு மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் சென்றுள்ளார். அங்கு அவரும், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட்டும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது டோனி அபாட் பேசுகையில், “காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும். இதுவரை நடைபெற்ற தேடுதல் பணிகளிலேயே, தற்போது நடைபெற்று வரும் தேடுதல் பணிதான் மிகவும் கடினமானதாகும்.

இருப்பினும், அந்த விமானத்தை கண்டுபிடிக்கும் வரை ஓய மாட்டோம். இந்த பணியில், உலகின் சிறந்த நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் பேசுகையில், “விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் அளிக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம்’ என்றார்.

பிரிட்டன் நீர்மூழ்கி கப்பல்: இந்நிலையில், விமானத்தை தேடும் பணியில், பிரிட்டனின் ஹெச்.எம்.எஸ். டையர்லெஸ் என்னும் நீர்மூழ்கிக் கப்பல் வியாழக்கிழமை இணைந்து கொண்டது. காணாமல் போன விமானத்திலுள்ள கருப்பு பெட்டி ஒருவேளை கடலில் கிடக்கும் பட்சத்தில், அதிலிருந்து வெளிவரும் ஒலி அலையை கண்டுபிடிக்கும் முயற்சியில் அந்த நீர்மூழ்கி கப்பல் ஈடுபடும்.

இதனிடையே, விமானத்தை கண்டுபிடிக்க மலேசிய அரசு மேற்கொண்டு வரும் பணியை அந்த விமானத்தில் பயணம் செய்த சீனாவைச் சேர்ந்தவர்களின் உறவினர்களும், அந்நாட்டு இணையதள பயன்பாட்டாளர்களும் விமர்சனம் செய்து பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

பின்னணி: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு இந்தியர்கள் 5 பேர் உள்ளிட்ட 239 பேருடன் கடந்த மாதம் 8ஆம் தேதி சென்ற விமானம் காணாமல் போனது.

அந்த விமானம், இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், அதனை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply