புலம் பெயர் தமிழர்கள் 424 பேர் தடை செய்யப்பட்ட பட்டியலில்
புலம் பெயர் தமிழர்கள் 424 பேரை தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இலங்கை இணைத்துள்ளது. இலங்கையினால் தடை செய்யப்பட்ட தமிழீல விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 16 அமைப்புக்களுடனும் தொடர்புடையவர்கள் என குறிப்பிட்டே கடந்த மார்ச் 21 ஆம் திகதி அரச வர்த்தமாணி ஊடாக அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1854/41 ஆம் இலக்கத்தை உடைய குறித்த வர்த்தமானியிலேயே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.விசேட வர்த்தமானியூடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அரசு இவர்கள் 424 பேரும் இலங்கைக்குள் நுழைய தடை விதித்துள்ளது. இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது இவ் வர்த்தமானியில் 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
1968 ஆம் ஆண்டின் ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை சட்டம் என குறிப்பிடப்பட்டு பொது அரசாங்க அறிவித்தல்களின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தலானது ஐக்கிய நாடுகள் சபையின் ஒழுங்கு விதிகளின் 4(2)இன் கீழ் பெயர் குறிப்பிடப்பட்ட ஆட்கள், குழுக்கள் மற்றும் உருவங்களின் நிரல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஊடாகவே இந்த விடயங்கள் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இயற்கை மற்றும் சட்ட ஆட்கள், குழுக்கள், உருவங்கள் மற்றும் ஏனைய ஸ்தாபனங்களுடன் தொடர்புடைய வகையில் உரிய அதிகாரியால் உருவாக்கப்பட்டு பேணப்பட்ட பட்டியல் என்ற தலைப்பின் கீழ் முதலாவது அட்டவணை உருவங்கள் என உப தலைப்பிடப்பட்டு இலங்கை அரசால் தடை செய்யப்பட்டுள்ள 16 அமைப்புக்களினதும் பெயர் விபரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
EN/CA/2013/ 01 என்ற இலக்கத்துடன் ஆரம்பமாகும் குறித்த அமைப்புக்கள் தொடர்பான விபரங்களில் அமைப்பின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி அவை பட்டியல்படுத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தொடரிலக்கமானது EN/CA/2013/ 16 வரை நீண்டு செல்கிறது.
இரண்டாம் அட்டவணை இயற்கை மற்றும் சட்ட ஆட்கள் என உப தலைப்பிடப்பட்டுள்ள பட்டியலில் IN/CA/ 2013/ 01 இலக்கம் முதல் IN/CA/ 2013/ 424 இலக்கம் வரை 424 புலம் பெயர் தமிழர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இவர்கள் அனைவரினதும் முழுப் பெயர், அடையாளப் பெயர், இலங்கை முகவரி, வெளி நாட்டில் தற்போது அவர்கள் வதியும் முகவரி, கடவுச்சீட்டு இலக்கம்,வதியும் நாடு, நகரம் , தொலை பேசி இலக்கம் உள்ளிட்ட தேவையான அனைத்து அடிப்படை விடயங்களும் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் இந்த வர்த்தமானி ஊடாக இலங்கையினால் தடை செய்யப்பட்டுள்ள 16 புலம் பெயர் தமிழ் அமைப்புக்களுடனும் தொடர்புடையவர்கள் என இந்த 424 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply