தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு
ஊவா மாகாண சபைத் தேர்தல்கள் நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவிருக்கின்ற நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளன. தேர்தல்கள் சட்ட விதிகளின் பிரகாரம் இன்றும் நாளையும் எந்தவிதமான பிரசாரப் பணிகளும் மேற்கொள்ளப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுற்று நிரூபம் ஊடாக சகல அரசியல் கட்சிகள், சுயேச்சை குழுக்களுக்கும் ஊடகங்களுக்கும் அறிவித்துள்ளது.இதன் படி இன்று முதல் எந்தவொரு சுவரொட்டிகளும் காட்சிப்படுத்தப்பட முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண சபைத் தேர்தல் நாளை மறுதினம் 20 ஆம் திகதி பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் இரு மாவட்டங்களிலிருந்தும் 32 உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலமும் இருவர் போனஸ் ஆசன முறையிலும் தெரிவு செய்யப்படுவர்.
இதனடிப்படையில் பதுளை மாவட்டத்திலிருந்து 18 பேரும் மொனாராகலை மாவட்டத்திலிருந்து 14 பேருமாக 32 பேர் மக்கள் தெரிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சபைக்கு பதுளை மாவட்டத்திலிருந்து 10 அரசியல் கட்சிகளிலிருந்தும் நான்கு சுயேச்சைக் குழுக்களிலிருந்தும் இருநூற்று தொன்னூற்று நான்கு பேர் வேட்பாளர்களாக இருந்து வருகின்றனர். இம்மாவட்டத்தின் ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் ஆறு இலட்சத்து ஒன்பதாயிரத்து தொளாயிரத்து அறுபத்தாறு வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர்.
இவ்வாக்காளர்களில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்து எழுநூற்று இரண்டு பேர் என்ற வகையில் தமிழ் வாக்காளர்கள் இருந்து வருகின்றனர். முஸ்லிம் வாக்காளர்கள் 48 ஆயிரம் பேர் உள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய ஜனநாயக கூட்டமைப்பு, மவ்பிம ஜனதா கட்சி, ஜனசெத பெரமுன கட்சி, ஜனநாயகக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஸ்ரீ லங்கா தொழிற் கட்சி, ஐக்கிய இலங்கை மகாசபாக் கட்சி ஆகிய 10 அரசியல் கட்சிகளும் நான்கு சுயேட்சைக் குழுக்களும் களம் இறங்கியுள்ளன. இவற்றில் பதுளை மாவட்டத்தில் மகியங்கனை தேர்தல் தொகுதியில் 93 ஆயிரத்து மூந்நூற்று எண்பத் தேழு பேரும் வியலுவை தொகுதியில் 50 ஆயிரத்து அறுநூற்று நாற்பத்தெட்டு பேரும் பசறை தேர்தல் தொகுதியில் ஆறுபத்தொறாயிரத்து தொளாயிரத்து முப்பத்து மூன்று பேரும் பதுளை தேர்தல் தொகுதியில் 54 ஆயிரத்து முன்னூற்று இருபத்தேழு பேரும் ஆலி.எலை தேர்தல் தொகுதியில் 68 ஆயிரத்து இருநூற்று எழுபத்தெட்டு பேரும் ஊவா பரணகம தேர்தல் தொகுதியில் 61 ஆயிரத்து தொளாயிரத்து இருபத்தைந்து பேரும் வெலிமடை தேர்தல் தொகுதியில் 73 ஆயிரத்து முந்நூற்று எட்டு பேரும் பண்டாரவளை தேர்தல் தொகுதியில் 82 ஆயிரத்து இருபத்தைந்து பேரும் அப்புத்தளை தேர்தல் தொகுதியில் 64 ஆயிரத்து நூற்று முப்பத்தைந்து பேருமாக ஆறு இலட்சத்து ஒன்பதாயிரத்து தொளாயிரத்து அறுபத்தாறு பேர் ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் வாக்காளர்களாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விசேட அம்சங்கள்
இத்தேர்தலில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த ஹரின் பெர்ணான்டோ தமது பதவியை இராஜிநாமாச் செய்து விட்டு முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
லுணுகலை பிரதேச சபையின் இ.தொ.கா. உறுப்பினராக இருந்த ஆறுமுகம் கணேசமூர்த்தி ஆளும் கட்சி சார்பாகவும் அச்சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரான வேலாயுதம் உருத்தரதீபன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகவும் போட்டியிடுகின்றனர். ஐக்கியதேசியக் கட்சி பதுளை மாவட்டப் பட்டியலில் இ.தொ.கா. சார்பாக இருந்த முன்னாள் பிரதி கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன், இ.தொ.கா. சார்பாக இருந்த முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் எம்.பி. லோகநாதன், மக்கள் விடுதலை முன்னணி சார்பாக இருந்த முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் பொன்னுசாமி பூமி நதன், முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கே. வேலாயுதத்தின் புதல்வனான உருத்திரதீபனும் போட்டியிடுகின்றனர்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முன்னாள் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், லுணுகலை பிரதேச சபை உறுப்பினராக இருந்த ஆறுமுகம் கணேச மூர்த்தி, வெலிமடை மாவட்டத் தலைவர் ஆறுமுகம் சிவலிங்கம் ஆகியோர் இ.தொ.கா. சார்பாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பசறைத் தொகுதி அமைப்பாளரும் ஜனாதிபதி இணைப்புச் செயலாளருமான வடிவேல் சுரேஸ், மலையக மக்கள் முன்னணி சார்பாக அம்முன்னணியின் முன்னள் ஊவா மாகாண சபை உறுப்பினருமான அ. அரவிந்குமார், தொழிலாளர் தேசிய சங்கம் சார்பாக எஸ். இராசமாணிக்கம் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
பெண் பிரதிநிதித்துவம்
ஊவா மாகாண சபைத் தேர்தலின் பதுளை மாவட்டம் சார்பாக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பட்டியல்களில் மொத்தமாக பதினொரு பெண்கள் போட்டியிடும் அதேவேளை மூன்று புத்த பிக்குகள் தலைமையில் 21 தமிழ் வேட்பாளர்களும் களம் இறக்கியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பட்டியலில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் உள்ளடக்கப்படாமையும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் விடுதலை முன்னணியில் இரு தமிழர்களும் ஜனநாயகக் கட்சியில் ஒரு தமிழ்ப் பெண்ணும் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் சிவ ஸ்ரீ சுதாகர சர்மாவின் புதல்வி மீரா தலைமையிலான சுயேச்சைக் குழுவும் பிறிதொரு தமிழ் வேட்பாளர்களடங்கிய சுயேச்சைக் குழுவும் பதுளை மாவட்ட தேர்தல் களத்தில் குதித்துள்ளன.
பதுளை மாவட்ட தேர்தல் களத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஹேமா ரட்ணாயக்க, மவ்பிம ஜனதா கட்சியில் சமீலா தில்ருக்சி த சில்வா, ஜனசெத பெரமுன கட்சியில் பி.ஆர். மல்லிகா, சித்ராணி டெடிகம, டி.எம். அனுலாவதி, ஜனநாயக கட்சியில் கோமாளம் பிரியதர்ஸிசினி பெருங்கொண்டார், தேசிய சுதந்திர முன்னணியில் பி.எம். யசோ மெனிகா, சுயேச்சைக் குழு ஒன்றில் வேலாயுதம் சுந்தரவதனி, சுயேச்சைக்குழு நான்கில் சிவஸ்ரீ சுதாகர சர்மா, மீரா தலமையில் சாமுவேல் செல்வமலர், சிவபாலன் வசந்த குமாரி, ஸ்ரீ லங்கா தொழில் கட்சியில் எஸ்.எம். குசுமாவதி என்ற வகையில் பன்னிரன்டு பெண்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஐந்து பேர் தமிழ்ப் பெண்களாவர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply