பாரிய மண்சரிவு புதையுண்டது கிராமம்

பதுளை மாவட்டம் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீரியபெத்த பெருந்தோட்டத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற பாரிய மண்சரிவினால் அந்தக் கிராமம் முற்று முழுதாக மண்ணில் புதையுண்டது. நேற்றுக் காலை 7 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது. பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் ஏழு லயன் குடியிருப்புக்களைக் கொண்ட 140 வீடுகள் நிலத்தினுள் புதைந்ததாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 300 க்கும் மேற்பட்டவர்கள் புதையுண்டிருக்கலாமென அஞ்சப்படுகின்றது. அதேநேரம், புதையுண்டவர்களில் 8 சடலங்கள் நேற்று மாலை வரை மீட்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று அறிவித்தது.

சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான மூவர் சிகிச்சைகளுக்காக பதுளை அரசினர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருடன் மீட்கப்பட்ட சுமார் 250 இற்கும் அதிகமான மக்கள் அரசாங்க அதிகாரிகளினால் பொது இடங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

லயன் குடியிருப்புக்களை மூடி சுமார் 10 அடி உயரம் வரை மண்மேடு காணப்பட்டதனால் உடனடியாக மீட்பு பணிகளை ஆரம்பிக்க முடியாத சிக்கல் நிலை ஏற்பட்டது. எனினும் முப்படையினரும் பொலிஸாரும் மேற்கொண்ட பகீரத பிரயத்தனத்தினால் காலை சுமார் 11.45 மணியளவிலேயே முழுமையான மீட்புப் பணிகளில் களமிறங்க முடிந்தது. மீட்பு பணிகளில் நேற்றைய தினம் சுமார் 500 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக இராணுவப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயவீர தெரிவித்தார்.

மனிதர்கள் நெருங்கமுடியாத பகுதிகளில் விமானப் படையினர் ஹெலிக்கொப் டர்களைக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். “எவ்வித முன்னறிகுறியுமின்றி ஒரே நொடியில் மண்மேடு சரிந்து விழுந்ததனால் எமக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தப்பி ஓடக்கூட காலஅவகாசம் எமக்கு இருக்கவில்லை” என அனர்த்தத்திலிருந்து தப்பி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவர் கூறினார். இதேவேளை “காலை 7 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதால் பாடசாலை மாணவர்களும் தோட்டத் தொழிலாளிகளும் மண் சரிவில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை” என அப்பிரதேசத்திலிருந்து உயிர்தப்பிய மற்றொருவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு மூன்று தினங்களாக அங்கு அடைமழைபெய்து வந்த போதிலும் நேற்றைய தினம் மழை கூடுதலாகப் பெய்யவில்லையென பிரதேசவாசியொருவர் கூறினார். ஹல்துமுல்லையில் நேற்றுக் காலை இடம்பெற்ற பாரிய அனர்த்தத்தை கேள்வியுற்றதும் இயலுமானவரை மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உயிர்களை காப்பாற்றுமாறும் உயிர் தப்பியோருக்கு தேவையான நிவாரண உதவிகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அவசர பணிப்புரை விடுத்திருந்தார்.

சம்பவத்தைக் கேள்வியுற்றதும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர அப்பிரதேசத்திற்கு நேரில் விஜயம் செய்தார். மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டட ஆராய்ச்சிகள் நிறுவன பணிப்பாளர் ஜயதிஸ்ஸ :-

“மண் சரிவுக்கு உள்ளான மீரியபெத்தாவ தோட்டம் ஏற்கனவே அபாய வலயத்திற்குள் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசமாகும். கட்டட ஆராய்ச்சிகள் நிறுவனம் கடந்த 2005 ஆம் ஆண்டு குறித்த பிரதேசத்தில் ஆய்வுகளை நடத்தி அங்குள்ள மக்களை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு கோரி அதேவருடம் மே மாதம் 13 ஆம் திகதியன்று விசேட அறிக்கையொன் றினை மாவட்ட செயலகத்துக்கு சமர்ப் பித்திருப்பது. பின்னர் 2011 ஆம் ஆண்டிலும் அதே பிரதேசத்தில் விசேட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அறிக்கையை உடன் நடைமுறைப்படுத்துமாறு மீண்டும் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

மாவட்ட செயலகம் அதற்கான நடவ டிக்கைகளை மேற்கொண்டபோதும் மக்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லையென தெரியவருகின்றது. எனினும். தற்போது இரத்தினபுரி மற்றும் பதுளையிலுள்ள எமது நிறுவனத்தின் அதிகாரிகள் ஹல்துமுல்ல, கொஸ்லந்த பிரதேசத்தில் மீரியபெத்தாவ பிரதேசத்திற்கு மேலாகவும் பள்ளத்திலும் வாழும் மக் களை உடனடியாக அங்கிருந்து அகற் றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.”

அமைச்சர் மஹிந்த அமரவீர:

அபாயகரமான வலயத்துக்குள் வசிப் போரை அங்கிருந்து அகற்றுவதற்கான அதிகாரத்தை வழங்கும் வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தினகரனுக்குத் தெரிவித்தார். அவ்வாறான அதிகாரம் எமக்கு வழங்கப்படாத வரையில் இதுபோன்ற உயிரிழப்புக்களையும் சேதங்களையும் தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறினார்.

கொஸ்லந்தவின் குறித்த பிரதேசத்திற்கு ஏற்கனவே இரு தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும். அப்பகுதி வாழ் மக்கள் அங்கிருந்து வெளியேற மறுத்து விட்டனர். எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய அபாய எச்சரிக்கையைக் கூறி மக்களை பலவந்தமாக அங்கிருந்து அகற்றுவதற்கோ அவர்களது வீடுகளை இயந்திரங்களால் தகர்ப்பதற்கோ அனர்த்த முகாமைத்துவ அமைச்சருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.

அதிகாரத்தையும் மீறி மக்கள் நலன்கருதிதான் இதனை மேற்கொண்டி ருந்தால் மக்களும் எதிர்க் கட்சியினரும் அதனை தவறான பார்வையிலேயே பார்த்திருப்பார்கள். எனவே எம்மால் விழிப்புணர்வை மட்டுமே ஏற்படுத்த முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.  இச் சம்பவம் மலையக வரலாற்றிலே சோகம் பதிந்த சம்பவமாக பதிவு செய் யப்பட வேண்டியதொன்றாகும். உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரதும் துயரங்களில் மலையக மக்கள் முன்னணி பங்கு கொள்கின்றது என்றும் அ. அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.

அதேவேளை கொழும்பிலிருந்து பதுளை சென்ற புகையிரதத்தின் முன் இயந்திரம் எல்ல பகுதியின் 271 மைல் கல் அருகே மண் சரிவிற்குள்ளாகியது. மண் சரிவிற்குட்பட்ட புகையிரதத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. உடுவரை தோட்டத்தில் லயன் குடியி ருப்புகள் பலவும் ஆலயமொன்றும் மண்சரிவிற்குள்ளாகியுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் எவருக்கும் காயங்களோ, உயிரிழப்புக்களோ ஏற்படவில்லை.

பதுளையில் பதுளை ஓயா பெருக்கெ டுத்ததினால் சுமனதிஸ்ஸகம, ஒயவத்த ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியு ள்ளன. அங்குள்ள மக்களில் 1100 பேர் பொது இடங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பசறை, எல்ல பிரதான பாதையும், பதுளை ஸ்பிரிங்வெளி பிரதான பாதையும். எல்ல, வெல்லவாய பாதையும். மகியங் கனை, கண்டி பாதையும் மண்சரிவுகள் மற்றும் கற்பாறை சரிவுகளினால் வாகன போக்குவரத்துகளுக்கு பெரும் தடை ஏற்பட்டுள்ளது.

மண்சரிவு மீட்பு பணிகளுக்கு 300 ‘நீலப்படையணி’யினர் விரைவு தலைவர் நாமல் எம்.பி. நடவடிக்கை

நீலப்படையணியின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம்.பியின் பணிப்பிற்கமைய ஹல்துமுல்ல மீரியபெத்த மண்சரிவு பகுதியில் மீட்புப் பணிக்காக நீலப்படை யணி உறுப்பினர்கள் 300 பேர் சென்றுள்ளனர். தேவைக்கேற்றவாறு மேலும் நீலப்படையணியின் உறுப்பினர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு நீலப்படையணியின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வகையான நிவாரணங்கள் வழங்குவது குறித்தும் ‘நீலப்படையணி’ பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது உலர் உணவு வழங்குதல், சமைத்த உணவு வழங்குதல், குடிநீர் போத்தல்கள் வழங்குதல், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் நீலப்படையணி கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீலப்படையணியின் தலைவர் ஆழ்ந்த காவலையும் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் பூட்டு

கொஸ்லாந்த பிரதேசத்தில் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நான்கு பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. கொஸ்லந்த தமிழ் வித்தியாலயம், பூனாகலை தமிழ் வித்தியாலயம், கிரேக் தமிழ் வித்தியாலயம், மீரியாபெத்த தமிழ் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளுமே மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகளில் 500 படை வீரர்கள்

பதுளை, கொஸ்லந்த, மீரியாவத்தை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளுக்கு முப்படைகளைச் சேர்ந்த சுமார் 500 வீரர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, இராணுவத்தினரால் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கனரக வாகனங்கள் கனரக இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி மீட்பு பணிகளை முப்படையினர் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்பின் பேரிலேயே முப்படையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மீட்பு நடவடிக்கைகளுக்காக உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மீட்பு பணிகளுக்கு தேவையான மேலதிக பக்கோ மற்றும் கனரக இயந்திரங்கள் கொழும்பிலிருந்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த அவர், மாவட்ட அரசாங்க அதிபர், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க உதவும் பொருட்டே முப்படையினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

மீட்பு பணிகளுக்கு தொடர் மழையும் பணி மூட்டமும் இடையூராக காணப்பட்ட போதிலும் முப்படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார். சம்பவம் காலை 7.45 மணியளவில் இடம்பெற்ற போதிலும் சம்பவம் நடைபெற்று 45 நிமிடங்களுக்குள் சுமார் 8.30 மணியளவில் 15 அதிகாரிகள் உட்பட 214 இராணுவ வீரர்கள் அடங்கிய முதலாவது குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 300 முப்படை வீரர்கள் அடங்கிய இரண்டாவது மீட்பு குழுவினர் சென்றடைந்ததாக இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கவின் ஆலோசனைக்கு அமைய மத்திய பிராந்திய பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா, பிரதான கள பொறியியல் அதிகாரி மேஜர் ஜெனரல் வசந்த விக்ரமசூரிய ஆகியோர் உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கைகளை ஆராய்ந்துள்ளனர்.

விமானப் படை

இந்தச் சம்பவத்தை அடுத்து துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ. – 17 ரக ஹெலிகொப்டர்கள் இரத்மலானை விமானப் படைத் தளத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதிலும் தொடர் மழை மற்றும் மோசமான சீரற்ற காலநிலை காரணமாக மீட்பு பணிகளில் ஹெலிகொப்டர்களை ஈடுபடுத்த முடியாத நிலை காணப்பட்டதாக விமானப் படையின் பேச்சாளர் வின்ங் கொமாண்டர் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

எனினும், தியத்தலாவை விமானப் படைத் தளத்திலுள்ள விமானப் படையினர் தரை வழி மீட்பு பணிகளுக்கு உதவும் வகையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எவ்வாறாயினும், விமானப் படையினரும் விமானப் படையின் ஹெலிகொப்டர்களும் தொடர்ந்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, முப்படையினருடன் இணைந்து பொலிஸார், சுகாதார அதிகாரிகள் குழுவினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply