அரசாங்கத்தை விட்டு விலகி மைத்திரிக்கு ஆதரவளியுங்கள் : உனைஸ்
அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு மனச்சாட்சி இருந்தால், அரசாங்கத்தை விட்டு வெளியேறி பொதுவேட்பாளரை ஆதரிக்க முன் வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாறூக் மட்டக்களப்பு காத்தான்குடியில் வைத்து தெரிவித்தார். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து, காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அனைத்து சுகபோகங்களையும் விட்டு விட்டு இந்நாட்டில் ஜனநாயகமும் நல்லாட்சியும் எற்பட வேண்டும் என்பதற்காக, மைத்திபால சிறிசேன, அரசாங்கத்தை விட்டு வெளியேறி பொது வேட்பாளராக களத்துக்கு வந்துள்ளார்.
நான் ஆளும் கட்சியிலிருக்கும் போது, 5 பிரதேச செயலப்பிரிவுகளுக்கு அபிவிருத்திக்குழு தலைவராக இருந்தேன். இந்நாட்டு ஜனாதிபதியின் மகனோடு எனக்கு மிகவும் நெருக்கமான உறவு இருந்தது. அத்தனை நட்புகளையும் உறவுகளையும் பட்டப் பதவிகளையும் தூக்கி எறிந்து விட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறினேன்.
அரசாங்கத்திலுள்ள பல முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கேட்டபோது, அரசாங்கத்தில் இருக்கின்றோம் ஆனால், வாக்களிக்கும் போது நாங்கள் மைத்திரிக்கு வாக்களிப்போம் என கூறுகின்றனர்.
அரசாங்கத்தோடு ஒட்டியிருக்கும் பொதுபலசேனா இயக்கம், இந்த இரண்டு வருட காலமும் முஸ்லிம்களுக்கு இவ்வளவு அநியாயம் செய்தது என்றால், ஜனாதிபதியை வெற்றியடையச் செய்ய வைப்பதற்காக அவர்கள் தற்போது களத்தல் இறங்கி வேலை செய்து விட்டு மீண்டும் மஹிந்த ஆட்சிக்கு வந்தால் அங்கு முஸ்லிம்கள் மீதான அட்டகாசம் எவ்வாறிருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள்.
முஸ்லிம்கள் மீது பொதுபலசேன நடாத்திய அடாவடித்தனங்களின் பின்னணியில், அரசாங்கம் இருந்திருக்கின்றது என்பது நமக்கு நன்கு தெரிந்து கொண்டும் இந்த மஹிந்தவின் ஆட்சிக்கு முஸ்லிம்களாகிய நாம் ஒரு போதும் வாக்களிக்க முடியாது என்று தெரிவித்தார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply