கடந்த 6 மாத ஆட்சியில் மோடி எதுவும் செய்யவில்லை: நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வில் இருந்து விலகினார். சமீபத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு குஷ்பு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:– தி.மு.க.வில் இருந்து விலகியதற்கான காரணம் பற்றி கூற மாட்டேன். ஆனால் தி.மு.க. தலைவர் கலைஞரை நான் மிகவும் மதிக்கிறேன். இதனால் அவர் பற்றியோ, தி.மு.க.வை பற்றியோ மோசமாக பேச மாட்டேன்.காங்கிரஸ் பாரம்பரியத்தில் சிறு வயதில் இருந்து வளர்ந்தவள் நான். மும்பையில் எனது குடும்பத்தினர் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஓட்டு போடுவார்கள்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வெறு நம்பிக்கை கொண்ட மக்கள் வசிக்கிறார்கள். நான் முற்றிலும் மத சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டவள். காங்கிரஸ் கட்சிதான் அதை உண்மையிலேயே பிரதிபலிக்கிறது. இதனால் தான் காங்கிரசில் இணைந்தேன்.

எனவே எனது இந்திய நாடு வேறு எந்த கலரிலோ அல்லது காவியிலோ இருப்பதை விரும்ப வில்லை. கடந்த 6 மாத ஆட்சியில் நரேந்திர மோடி எதையும் செய்ய வில்லை. அவர் கொடுத்த வாக்குறுதிகள் அப்படியே இருக்கிறது. சமஸ்கிருதத்தை தான் மக்களிடம் திணிக்கிறார்கள்.

இன்னும் 4½ ஆண்டுகள் இருக்கிறது. என்ன செய்ய போகிறார் என்பதை பார்ப்போம்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஏற்றம், இறக்கம் இருக்கும். தற்போது பா.ஜனதா ஆட்சியை பிடித்துள்ளது. இதே நிலைதான் எப்போதும் இருக்கும் என்று கூறிவிட முடியாது.

காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் இல்லை. நேரு பிரதமராக இருந்த போது இந்திரா காந்தி அரசியலில் மிகுந்த ஈடுபாடுடன் இருந்தார். இதனால் நேருவுக்கு பிறகு அவரை சிறந்தவர் என்பதால் தலைவர்கள் கொண்டு வந்தனர். அவர் பிரதமராக இருந்த போது ராஜீவ் காந்தி விமானம் ஓட்டுவதில் மகிழ்ச்சியாக இருந்தார். தாயார் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகே அவர் அரசியலுக்கு வந்தார். ராஜீவ் படுகொலைக்கு பிறகே பொறுப்பை உணர்ந்து சோனியா, ராகுல் காந்தி அரசியலுக்கு நுழைந்தனர்.

தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வியால் ராகுல் காந்தியின் நிலை முடிந்து விட்டதாக கருதக் கூடாது. அவருக்கு இன்னும் காலம் இருக்கிறது.

தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் ஒன்றும் நடக்க வில்லை. சட்டம்– ஒழுங்கு கெட்டு விட்டதாக தினசரி செய்திகள் வெளியாகியுள்ளன. வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை. திட்டங்கள் பாதியில் நிற்கின்றன. தமிழ்நாட்டில் வசிப்பவர் என்ற முறையில் இது ஏமாற்றம் அளிப்பதாக உணர்கிறேன்.

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply