முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தோல்விக்கு முழுமையான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன் : முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் தான் பதவி வகித்த காலப்பகுதியில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அரசாங்கத்தினால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதன்படி தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான பொலிஸாரின் விசாரணைக்கு தான் பூரண ஒத்துழைப்பினை வழங்கத் தயார் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார் .இதேவேளை நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்று பல வருடங்களாக அரசியல் செய்து வரும் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஒரு போதும் மக்களுடைய பணத்தை கொள்ளையிட்டதுமில்லை: கொள்ளையிட போவதுமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு அமெரிக்கா சென்ற முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ நேற்று மீண்டும் இலங்கை வந்தடைந்தார். டுபாய் நாட்டிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பஷில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ராஜபக்ஷ குடும்பத்தவர்கள் எப்போதும் மக்களின் நலனுக்காகவே போராடி வந்துள்ளனர். 1931 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் எமது குடும்பத்தினர் அரசியல் செய்து வருகின்றனர். இதனூடாக மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளனர். எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் ராஜபக் ஷ குடும்பத்தினர் மக்களுடைய பணத்தை கொள்ளையிட்டதில்லை. அவ்வாறு கொள்ளையிடப்போவதுமில்லை.
எவ்வாறாயினும் எனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு என்னால் முடியுமான அனைத்து ஆதரவினையும் வழங்க தயாராக உள்ளேன். நான் எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லை. இதனை என்னால் உறுதிப்படுத்த முடியும். ஆகவே பொலிஸாரின் விசாரணைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலேயே நான் நாடு திரும்பினேன்.
இதேவேளை நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதியும் எனது சகோதரருமான மஹிந்த ராஜபக் ஷவின் தோல்விக்கு முழுமையான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன். எனினும் தோல்விக்கு நானே பிரதான காரணமாக அமைந்ததை போன்று அவரின் முன்னைய வெற்றிகளுக்கும் நானே பொறுப்பாவேன்.
ஆகவே அரசியல் ரீதியாக பிழையான தீர்மானங்கள் எடுத்திருப்பினும் நான் ஒருபோதும் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை என்பதனை என்னால் உறுதியாக கூறமுடியும்.
எவ்வாறாயினும் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்தும் வகையில் எதிர்வரும் காலங்களில் செயற்படுவேன் என்று முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply