நேபால் நிலநடுக்கம் பலி எண்ணிக்கை அதிகரிக்கும்
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில், 3-வது நாளாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், குடிநீர், உணவு உள்ளிட்ட பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மேலும், மலை கிராமங்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை கொண்டு சேர்ப்பதில் சிக்கல் நிலவுகிறது. நிலநடுக்கத்திற்கு, பலி எண்ணிக்கை 10,000 தாண்டும் என அஞ்சப்படுகிறது.
வரலாறு காணாத இந்த பேரழிவை தேசிய பேரிடராக அறிவித்துள்ள நேபாளம், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முன்வந்துள்ள போதும், மலை கிராமங்களுக்கு குடிநீர், உணவு, உள்ளிட்ட அத்தியவாசிப் பொருள்க கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பெட்ரோல், டீசல் கிடைப்பது அரிதாகியுள்ளதால், போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. காத்மாண்டுவில் உள்ள மின் நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், காத்மாண்டு உள்ளிட்ட நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. தோண்ட தோண்ட பிணக் குவியல்களாக காணப்படுவதால், சடலங்கள் மொத்தமாக பாக்மதி நதிக்கரையில் எரியூட்டப்பட்டு வருகின்றன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க போதிய உபகரணங்கள் இல்லாததால், வெறும் கைகளால் தோண்டி, காயமடைந்தவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு வருகின்றனர்.
நேபாளத்துக்கு புனித யாத்திரை மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகளும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால், பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்துள்ளன. திரும்பிய திசையெங்கும் சிதைந்த கட்டடங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரல்களும் தான் தற்போதைய நேபாளத்தின் யதார்த்த நிலை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply