இந்தியாவில் அடைக்கலம் தேடிவரும் நேபாள மக்கள்
நிலநடுக்கத்தால் உள்கட்டமைப்பு வசதிகள் உருக்குலைந்துள்ள நேபாளத்திலிருந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக இந்தியாவில் அடைக்கலம் தேடிவருகின்றனர். இந்திய நேபாள எல்லை வழியாக இதுரை 34 ஆயிரம் பேர் பீகார் மாநிலத்திற்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 7.9 ரிக்டர் அலகுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வரலாறு காணாத சேதத்தைக் கண்டுள்ள நேபாளத்தில் மீட்பு பணிகள் 5வது நாளாக தொடர்ந்து வருகின்றன. இடிபாடுகளை அகற்ற அகற்ற பிணக் குவியல் காணப்படுவதால் நிலநடுக்கம் பலிகொண்ட உயிர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தலைநகர் காத்மாண்டுவில் தரைமட்டமான பிரம்மாண்ட கட்டிடங்களின் இடிபாடுகளை அகற்றும் பணியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தரைமட்டமான 7 அடுக்கு மாடி கட்டிடத்தில் உயிரைக்காக்க சுமார் 80 மணி நேரம் போராடிய ரிஷி கனால் என்கிற 28 வயது வாலிபரை பிரான்ஸ் மீட்புக் குழுவினர் மீட்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே நேபாளத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாலும், அடிப்படை வசதிகள் கிடைக்காததாலும் அந்நாட்டிலிருந்து இந்தியாவிற்கு தஞ்சம் தேடி கூட்டம் கூட்டமாக நேபாள மக்கள் வருகின்றனர். கடந்த 4 நாட்களில் இந்திய நேபாள எல்லையைக் கடந்து சுமார் 34 ஆயிரம் பேர் பீகார் மாநிலத்திலுள்ள ராக்சால் முகாமிற்கு அடைக்கலம் தேடி வந்துள்ளனர். நேற்று அடைக்கலம் தேடி வந்தவர்களை மத்திய அமைச்சர்கள் அனந்த் குமாரும், ராதாமோகன் சிங்கும் வரவேற்று அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்தனர்.
நேபாளத்தில் அடிப்படை வசதிகள் கிடைக்காத மக்கள் நேற்று தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நேபாள நாடாளுமன்றம் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பேருந்து பாஸ்கள் கூட போலியானதாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply