சவுதி மன்னர் சல்மானுடன், ஒபாமா ‘திடீர்’ பேச்சு ஏமனில் உடனடியாக சண்டையை முடிவுக்கு கொண்டு வர ஆலோசனை
சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஏமனில் சண்டையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டியது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
ஏமனில் சண்டை அரபு நாடான ஏமன் நாட்டில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், அதிபர் மன்சூர் ஹாதி, சவுதிக்கு ஓட்டம் பிடித்தார்.
அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்காக ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடந்த மார்ச் 26–ந் தேதி முதல் சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகளின் கூட்டுப்படைகள் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
ஐ.நா. சபை சமீபத்தில் மனிதாபிமான அடிப்படையில், ஏமனில் 6 நாள் சண்டை நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது. கடந்த வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்திருக்க வேண்டிய சண்டை நிறுத்த அறிவிப்பு பலன் தரவில்லை. அந்த சண்டை நிறுத்த அறிவிப்புக்கு மத்தியிலும் ஏமனில் சண்டை நடந்து வருகிறது.
அந்த நாட்டின் 2–வது முக்கிய விமான நிலையமான ஏடன் விமான நிலையம், கடந்த மார்ச் 25–ந் தேதி கிளர்ச்சியாளர்கள் வசமானது. அந்த விமான நிலையத்தை மீட்பதற்கு அரசு படையினர் கடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அந்த விமான நிலையம் அருகே, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையினர், சவுதி அரேபிய கூட்டுப்படையினர் ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தினர்.
இதைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த விமான நிலையம் அரசு படை வசம் வந்தது. இது அரசு படைக்கு கிடைத்த முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது.
ஏற்கனவே ஏமனில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
அதன் ஒரு முக்கிய நிகழ்வாக, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, சவுதி அரேபிய மன்னர் சல்மானுடன் திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஏமன் நாட்டில் சண்டையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். சண்டையை முடிவுக்கு கொண்டு வர பேச்சு வார்த்தை நடத்தலாம் என ஒபாமா, சல்மானிடம் யோசனை கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த தொலைபேசி பேச்சு குறித்து வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறும்போது, ‘‘ஈரான், வல்லரசு நாடுகள் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர். ஏமனில் சண்டையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டியதின் அவசியம் பற்றியும் ஜனாதிபதி ஒபாமாவும், சவுதி மன்னர் சல்மானும் பேசினர். பல்முனை தாக்குதல்களுக்கு மத்தியில் ஏமன் மக்களுக்கு உதவிகள் செய்வதை உறுதி செய்வதின் முக்கியத்துவம் பற்றியும் அவர்கள் கலந்தாலோசனை செய்தனர்’’ என்றன.
ஒபாமாவின் தொலைபேசி பேச்சு காரணமாக ஏமனில் சண்டையை முடிவுக்கு கொண்டு வர சவுதி பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply