பஞ்சாப் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் எங்கள் நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல: பாக்.விளக்கம்

பஞ்சாபின் குர்தாஸ்பூர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் அல்ல என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் கடந்த 27-ந்தேதி புகுந்த தீவிரவாதிகள் பேருந்து மற்றும் காவல்நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் எதிரொலித்து வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக டெல்லி மேல்- சபையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிக்கை ஒன்றை அளித்தார். அதில் ‘‘பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் சமீபத்தில் பெய்த பெருமழையால் ஆறுகள், கால்வாய்களில் பெருமளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 3 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபில் நுழைந்துள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட ஜி.பி.எஸ். கருவிகளை ஆய்வு செய்தபோது, அவர்கள் பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட டாஷ் (ரவி ஆறு நுழையும் பகுதி) வழியாக இந்தியாவுக்குள் நுழைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் முற்றிலுமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவாசி கலிலுல்லா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

குர்தாஸ்பூரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். சுயவிளக்கமளிக்கும் வகையில் நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளோம். விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் பிறர் மீது குற்றம் சுமத்துவது ஆரோக்கியமான போக்கு அல்ல. மேலும், இந்தியாவில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் அல்ல

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply