அமெரிக்க தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இரண்டாம்கட்ட தலைவன் பலி

ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இரண்டாம்கட்ட தலைவனாக இருந்துவந்தவனை சுட்டுக் கொன்றதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈராக்கின் மோசூல் நகரில் கடந்த 18-ம் தேதி அமெரிக்க விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இரண்டாம்கட்ட தலைவனாக பொறுப்பேற்றிருந்த ஃபாதில் அஹ்மத் அல்-ஹயாலி சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாஜி முட்டாஸ் என்றும் அழைக்கப்படும் ஃபாதில் அஹ்மத் அல்-ஹயாலி, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் நிறுவனத் தலைவனான அபூபக்கர் அல் பக்தாதியின் முதன்மை துணைத் தளபதியாகவும், அவ்வியக்கத்தின் இரண்டாம்கட்ட தலைவனாகவும் இருந்துவந்ததாகவும் அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதலில் அவனுடன் சேர்ந்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஊடக ஆலோசகராக இருந்த அபு அப்துல்லா என்பவனும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் முன்னர் இயங்கிவந்த அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவனாக இருந்துவந்த ஃபாதில் அஹ்மத் அல்-ஹயாலி, பின்னர் சதாம் உசேன் ஆட்சியின்போது ராணுவத்தில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தான்.

கடந்த 2 ஆண்டுகளாக ஈராக்கில் ஐ.எஸ். படையினர் நடத்திய வன்முறை வெறியாட்டங்களுக்கு திட்டமிட்டு தந்து, ஈராக் மற்றும் சிரியாவுக்கு இடையில் ஏராளமான ஆயுதங்கள், பணம் மற்றும் படைகளின் பரிவர்த்தனையை இவன் கண்காணித்து வந்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply