இந்தியா-பாக். ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை 9-ந்தேதி தொடங்குகிறது

india pks ரஷியாவின் உபா நகரில் கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திரமோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பும் சந்தித்து பேசியபோது, இருநாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுநடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் பாகிஸ்தானின் பிடிவாதத்தால் இந்த பேச்சுவார்த்தை ரத்தானது. இந்தநிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி இருநாட்டு எல்லை பாதுகாப்பு படை ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தை டெல்லியில் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. 13-ந்தேதி வரை மொத்தம் 5 நாட்கள் வரை நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ராணுவ டைரக்டர் ஜெனரல் மஜ் ஜென் உமர்பாரூக் பர்கி தலைமையிலான 16 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொள்கிறார்கள். இந்திய குழுவுக்கு எல்லைப்பாதுகாப்பு படை தலைவர் தேவேந்திரகுமார் பதக் தலைமை தாங்குகிறார்.

 

இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் ராணுவ டைரக்டர் ஜெனரல் 8-ந்தேதி வாகா எல்லை வருகிறார். அங்கிருந்து அவர் அமிர்தசரஸ் சென்று, பின்னர் விமானம் மூலம் டெல்லி வருகிறார்.

 

இந்த பேச்சுவார்த்தையின்போது பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்துவது பற்றியும், இதனால் உயிர் இழப்பு ஏற்படுவது பற்றியும் தெரிவிக்கப்படும். தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொள்ளும். மேலும் குஜராத் மாநில எல்லையில் உள்ள கட்ச் பகுதியில் நடைபெறும் கடத்தல் மற்றும் சமூகவிரோத செயல்கள் பற்றியும் பாகிஸ்தான் குழுவினரிடம் தெரிவிக்கப்படும்.

 

இந்திய வான் எல்லைப்பகுதிக்குள் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் பறப்பதை தடுத்து நிறுத்துமாறும் இந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியா தரப்பில் அறிவுறுத்தப்படும். மேலும் எல்லையில் உள்ள ராணுவ நிலைகள் மீது தாக்குவது மற்றும் ரோந்து செல்லும் வீரர்களை தாக்குவது மற்றும் பொது மக்களை குறிவைத்து சுடுவது போன்ற பல்வேறு பிரச்சினைகளை இந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியா எழுப்பும் என தெரிகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply