போர்க்குற்ற விசாரணை: வெளிநாட்டு வக்கீல்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்: சிறிசேனா

maithiri இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு நடந்த இறுதி கட்ட போரின் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் சிங்கள படைகளால் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான தமிழர்கள் சிறை பிடிக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்டனர். தமிழ்ப் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்கள் நடந்தன.

தமிழர்களை நிலை குலையச் செய்த இந்த போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச அளவில் விசாரணை நடத்தி ராஜபக்சே உள்ளிட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையமும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றது. இதற்கு இலங்கை எதிர்த்தது.

இந்த நிலையில் ‘‘வெளிநாட்டு நீதிபதிகள், சட்ட நிபுணர்கள், உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்றை இலங்கை அமைத்து போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்று அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளும் ஏற்றுக் கொண்டதால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

ஐ.நா. தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதாக இலங்கை அறிவித்தது. இலங்கையில் உள்ள நீதித்துறை மீது நம்பகத்தன்மை இல்லை என்று கூறப்பட்டுள்ள அந்த தீர்மானத்தை இலங்கை ஆதரித்து இருப்பது உலக நாடுகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆனால் சில மணி நேரத்துக்கு கூட இந்த ஆச்சரியம் நீடிக்கவில்லை. வழக்கம் போல இந்த விஷயத்திலும் இலங்கை ஜனாதிபதி சிறிசேனா பல்டி அடித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது தமிழர்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக, போர்க் குற்றம் பற்றி சர்வதேச விசாரணை நடத்த உதவுவேன் என்றார். வெற்றி பெற்று ஜனாதிபதியானதும், ராஜபக்சேவை காப்பாற்றும் வகையில், சர்வதேச விசாரணையை ஏற்க இயலாது என்றார்.

தற்போதும் அவர் சர்வதேச விசாரணைக்கு எதிராக பேசியுள்ளார். ஐ.நா. தீர்மானம் பற்றி அவர் கூறியதாவது:–

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள் இலங்கையின் நீதித்துறைக்குள்ளே தான் நடைபெறும். அடுத்து வரும் மாதங்களில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

இந்த விசாரணையின் போது வெளிநாட்டு நீதிபதிகள், சட்ட நிபுணர்களை இலங்கை அனுமதிக்காது. வெளிநாட்டு வக்கீல்கள் இலங்கை கோர்ட்டில் நடைபெறும் விசாரணையில் ஆஜராக அனுமதிக்க மாட்டோம்.

போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமானால், அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும். அதை செய்யாமல் இந்த விஷயத்தை தொடர்ந்து நடத்துவது என்பது அரசியல் ரீதியாக கடினமானது.

ஐ.நா. பரிந்துரைப்படி உடனடியாக கோர்ட்டை அமைத்து விட முடியாது. சிங்கள மதத்தலைவர்கள், பல்வேறு கட்சி மூத்த தலைவர்கள், ராணுவ உயர் அதிகாரிகளுடன் கருத்துக்கள் கேட்டு ஆலோசனை பெற்ற பிறகே ஐ.நா. பரிந்துரைப்படி சர்வதேச விசாரணை கோர்ட்டு உருவாக்கப்படும்.

இவ்வாறு சிறிசேனா கூறினார்.

தமிழர்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி வெளிநாட்டு நீதிபதிகள் விசாரிக்க ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதும், ஈழத்தமிழ் அமைப்புகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தன. இறுதிக்கட்ட போரில் நடந்த கொடுமைகளுக்கு ஓரளவாவது நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் என்று சிறிசேனா இன்று கூறியதால் ஈழ தமிழர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply