வர்த்தகர் கடத்தல் விடுவிக்க 2 கோடி கப்பம் ; தகவல்களுக்கு 5 மில்லியன் சன்மானம்
பம்பலப்பிட்டி பிரதேசத்தில் கடத்தப்பட்ட வர்த்தகரை விடுவிக்க வேண்டுமாயின் இரண்டு கோடி ரூபாவை கப்பபமாக செலுத்த வேண்டுமென கடத்தற்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை கடத்தியவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கு 5 மில்லியன் பணப்பரிசு வழங்கப்படும் என கடத்தப்பட்ட வர்த்தகரின் தந்தை அறிவித்துள்ளார்.பம்பலப்பிட்டி கொத்தலாவலை அவனியூவைச் சேர்ந்த மொஹமட் ஷகீம் என்ற வர்த்தகர் நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடத்தப்பட்டவரின் தந்தையுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள் இரண்டு கோடி ரூபாய் கப்பம் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உங்கள் மகன் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கின்றார், அவரை விடுவிக்க வேண்டுமாயின் இரண்டு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என தொலைபேசியில் தொடர்புகொண்டவர்கள் தெரிவித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த வர்த்தகர் தொடர்பில் இதுவரை அவரிடம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ள 15 வர்த்தகர்களிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள், வழக்குகள் குறித்தும் இந்த விசாரணையின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட இடத்தில் காணப்படும் சி.சி.ரி.வி கமராக்களின் காட்சிகள் நேற்றைய தினம் கண்காணிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் தனது மகனை கடத்தியவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கு 5 மில்லியன் பணப்பரிசு வழங்கப்படும் என கடத்தப்பட்ட வர்த்தகரின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பான தகவல்கள் இருப்பின் 077 010 19 71 என்ற கையடக்க தொலைப்பேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறும் கோரப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply