இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 102 ஆக உயர்ந்ததாக தகவல்

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆலயங்களில் திரண்டு இருந்தனர்.இன்று காலை 8.45 மணி அளவில் கொழும்பில் உள்ள 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் உள்ள கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள தேவாலயம் ஆகிய இடங்களில் பிரார்த்தனை நடைபெற்று கொண்டு இருக்கும்போது திடீரென சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.

குண்டு வெடித்ததும் 3 தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அங்கு ஒரே அலறல் சத்தம் கேட்டது. பொதுமக்கள் நாலாபுறம் சிதறி ஓடினார்கள். இதேபோல கொழும்பில் உள்ள ஷாங்ரிலா, சினமான் கிராண்ட், கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டு வெடித்தது. இதனால் அங்கிருந்தவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.

குண்டு வெடிப்பு நடந்த இடங்களில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

3 தேவாலயம், 3 நட்சத்திர ஓட்டல்கள் ஆகிய 6 இடங்களில் அடுத்தடுத்த நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் இலங்கை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 52 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

அவர்கள் அங்குள்ள தேசிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

காயம் அடைந்த 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நட்சத்திர ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் தங்கியிருந்தனர். இதனால் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது.

பிரார்த்தனையில் குழந்தைகளும் ஏராளமாக பங்கேற்று இருந்தனர். இதனால் குண்டு வெடிப்பில் பல குழந்தைகளும் உயிரிழந்து இருக்கலாம். மட்டக்களப்பு பகுதி தமிழர்கள் அதிகம் நிறைந்த இடமாகும். இதனால் ஏரராளமான தமிழர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால் கொழும்பில் பதட்டம் நிலவுகிறது. நகரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் யார் என்று தெரியவில்லை. அங்குள்ள தீவிரவாதிகள் இந்த நாசவேலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை எந்தஒரு தீவிரவாத இயக்கமும் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்கவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply