தொண்டு நிறுவனங்களின் உதவியின்றி எதனையும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது: மஹிந்த

தூதரகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட நிதியின் ஊடாக அனைத்து விடயங்களும் தீர்மானிக்கும் நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற சுயதொழில் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். மேலும் கூறியுள்ளதாவது, “எங்கள் அரசாங்கம் சுயதொழில் புரிபவர்களுக்காக பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

ஆனால், இன்று சுயதொழில் செய்பவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. அனைவருக்கும் அரச தொழில்களைப் பெற்றுக் கொள்ள முடியாது.

எனவே, அரசாங்கத்திற்கு சுமையாக இல்லாமல் தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்லும் சுயதொழில் செய்பவர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும். இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் அனைத்தினாலும் பொது மக்களே அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றார்கள்.

தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்தநிலையில், தூதரகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

சட்டத்தின் ஆட்சி இன்று சரிந்துவிட்டது. கடந்த காலங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட விதம் தற்போது வெளிப்படுகின்றது. அவற்றுக்கு முக்கிய காரணமானவர்கள் வெளிப்படுத்தும் தகவல்கள் பற்றி தேடிப்பார்க்காமல் அவர்கள் தொழில்களில் இருந்து நீக்கப்படும் நிலைமையை இந்த அரசாங்கமே ஏற்படுத்தியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply